கமல் ஹாசன் ANI
தற்போதைய செய்திகள்

விஜயகாந்த் மிகவும் எளிமையானவர்: கமல் ஹாசன்

நடிகர் விஜயகாந்தின் நினைவேந்தல் கூட்டத்தில் பலரும் கலந்துகொண்டு விஜயகாந்த் உடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

யோகேஷ் குமார்

நடிகர் விஜயகாந்தின் நினைவேந்தல் கூட்டத்தில் பலரும் கலந்துகொண்டு அவருடனான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

டிசம்பர் 28 அன்று நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்தின் நினைவேந்தல் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட கமல் ஹாசன் பேசியதாவது:

“நான் முதலில் விஜயகாந்தைச் சந்தித்தபோது அவர் என்னிடம் எப்படிப் பழகினாரோ அப்படித்தான் பெரிய நட்சத்திரமான பின்பும் என்னிடம் பேசினார். அவர் உதவுவது பலருக்குத் தெரியாது. அவரால் பயன் அடைந்தவர்கள் அதனை மறக்க மாட்டார்கள். அவர் மிகவும் எளிமையானவர். பல விமர்சனங்கள், அவமானங்களைக் கடந்து மேலே உயர்ந்தவர் விஜயகாந்த். தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தவர். உண்மையில் அது மிகப் பெரிய விஷயம். ஆரம்ப மற்றும் கடைநிலை நடிகர்களுக்கான குரலாக இருந்தவர் அவர்.

தமிழக அரசியல் வரலாற்றில் பெரிய தலைவர்களுக்கு வந்த கூட்டம், இவருக்காகவும் வந்ததை நான் பார்த்தேன். எனக்கு அவரிடம் பிடித்த பல நல்ல குணங்களில் ஒன்று, அவருடைய நியாயமான கோபம். அது நடிகர் சங்கத்திற்கும் உதவியது என நினைக்கிறேன். ஒரு கமர்ஷியல் நடிகராகப் பெயர் எடுத்தது அவருடைய திறமை. நானும் அவர் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளேன். தனக்குப் பிடிக்காதவர்களைக்கூட அழைத்துப் பேசும் தைரியம் அவருக்கு உண்டு. அவர் போல் இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும். குட் பை கேப்டன்” என்றார்.