சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் செய்த துரோகத்திற்கு தனக்கும் தன் குழந்தைக்கும் நீதி வேண்டும் என்று ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மெஹந்தி சர்கஸ், பென்குவின் ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் தற்போது நடுவராகப் பங்கேற்று வருகிறார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு வழக்கறிஞர் ஸ்ருதி என்பவருடன் திருமணம் ஆகி, தற்போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜுடன் திருமணம் ஆகி, தான் 6 மாதம் கருவுறுத்து இருப்பதாக ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா கடந்த ஜூலையில் படங்களை வெளியிட்டு அறிவித்தார். பின்னர் கடந்த ஆகஸ்ட் 29 அன்று 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தன்னை மாதம்படி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகாரளித்தார்.
இந்நிலையில், இன்று (செப் 8) ஜாய் கிரிஸில்டா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது -
”மாதம்பட்டி ரங்கராஜ், திருமணம் மற்றும் கர்ப்பம் என்ற பெயரில் என்னை எப்படி ஏமாற்றி வஞ்சித்தார் என்பது குறித்து சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்து 10 நாட்கள் ஆகிவிட்டன. தற்போது நான் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். எனது புகார் மீதான நடவடிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் புகாரளித்த மாதம்பட்டி ரங்கராஜ் விஐபி போல் வலம் வருகிறார். மேலும் என்னைப் பற்றி அநாகரிகமான, ஆபாசமான கருத்துகளைக் கூறி வருகிறார். #அப்பா உங்கள் அரசாங்கம் என்னைப் போன்ற ஆதரவற்ற பெண்களால் நம்பப்படுகிறது. இந்தப் பிரச்னையில் நீங்கள் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று கைகூப்பி மன்றாடுகிறேன். ஒரு விஐபி மற்றும் ஒரு பிரபலத்தால் பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்துவிட்டு, எந்த நடவடிக்கையும் இல்லாமல் சுற்றித் திரிய முடியுமா? எனது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் எனக்கும் நீதி வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார்.
Joy Crizildaa | Madhampatty Rangaraj | CM Stalin | Chennai Police |