ஜெயந்த் சிங்
ஜெயந்த் சிங் @jayantrld
தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணியில் சேர்ந்த சரண் சிங் பேரன்

யோகேஷ் குமார்

உத்திரப் பிரேதேசத்தின் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சி, இண்டியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது.

முன்னாள் பிரதமரான சரண் சிங்கிற்கு பாரத ரத்னா விருது வழங்கிய சில மணி நேரங்களில் அவருடைய பேரனும் ஆர்எல்டி கட்சியின் தலைவருமான ஜெயந்த் சிங், பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். சரண் சிங், இந்தியாவின் 5-வது பிரதமர். உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருமுறை பணியாற்றியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் இண்டியா கூட்டணியில் உள்ள அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, தானாக 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைச் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், ராஷ்ட்ரிய லோக் தளம், இண்டியா கூட்டணியிலிருந்து விலகி பாஜகவிடம் இணைந்துள்ளது. பாஜகவுடனான தொகுதி உடன்பாட்டின் முடிவில் ஆர்எல்டி கட்சிக்கு இரு தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

2019 தேர்தலில் உ.பி.யில் பாஜக தோற்ற 16 தொகுதிகளில் ஏழு தொகுதிகள், மேற்கு உ.பி. பகுதியைச் சேர்ந்தவை. ஆர்எல்டி கட்சி, மேற்குப் பகுதியில் செல்வாக்கு கொண்டுள்ளதால் இந்தத் தேர்தலில் உ.பி.யில் கூடுதல் வாக்குகளையும் கூடுதல் இடங்களையும் பாஜக கூட்டணி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 தேர்தலில் ஆர்எல்டி கட்சி, போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் தோற்றிருந்தது.