ஜி.ஆர். சுவாமிநாதன்  
தற்போதைய செய்திகள்

பா. இரஞ்சித் நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டால் யாரும் கேள்வி கேட்பதில்லை: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

யோகேஷ் குமார்

கோயில் விடுதலை அவசியமா? அரசியலா? என்கிற தலைப்பில் ‘ஸ்மார்ட்’ ஊடக நிறுவனத்தால் ஒரு விவாத நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசியதாவது:

ஒரு நிகழ்ச்சியில் ஒரு நீதிபதி கலந்துகொள்வதை ஏன் ஒரு விவாத பொருளாகவும், ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவும் மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. மதுரையில் பா. இரஞ்சித்தின் நீலம் அமைப்பினர் நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். பா. இரஞ்சித்தின் நிகழ்ச்சியில் ஏன் கலந்துகொண்டாய் என என்னை யாரும் கேள்வி கேட்டதில்லை. அப்படிக் கேட்காதபோது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது மட்டும் ஏன் கேள்வி வருகிறது என்று எனக்குப் புரியவில்லை. 3-4 ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பரான ஒரு வழக்கறிஞர், நாடார்களின் வரலாறு கருப்பா காவியா? என்ற புத்தகத்தை எழுதினார். வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராகக் கடுமையான தாக்குதலை அப்புத்தகத்தில் முன்வைத்திருந்தார். அந்தப் புத்தகத்தை வெளியிடும் விழாவை நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வலதுசாரிக்கு எதிராக எழுதப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழாவுக்கு நான் அனுமதி அளித்தேன். மேலும் தற்போது நடக்கும் நிகழ்ச்சி கூட இடமாற்றம் செய்யப்பட்டதாக அறிந்தேன். இது போன்ற அறிவார்ந்த நிகழ்ச்சிகள் நடக்கும் போது அதனை நடத்துபவர்களுக்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் அதனைத் தாங்கி நிற்க வேண்டும். ஒரு நீதீபதியாக உள்ளதால் இதற்கு மேல் நான் பேசுவது முறையாக இருக்காது. இங்குக் கூட்டம் குறைவாக உள்ளது என்பதற்காக மனம் தளரக் கூடாது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மேலும் நடைபெற வேண்டும் என்றார்.