தற்போதைய செய்திகள்

கேஎல் ராகுல் வரிசையில் கில்லுக்கும் காயம்: பெர்த் டெஸ்டில் விளையாடப்போவது யார்?

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பிஜிடி டெஸ்ட் தொடர் வரும் 22 அன்று தொடங்குகிறது.

கிழக்கு நியூஸ்

இந்திய வீரர் ஷுப்மன் கில்லுக்குப் பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பிஜிடி டெஸ்ட் தொடர் வரும் 22 அன்று தொடங்குகிறது. பெர்த்தில் நடைபெறும் முதல் டெஸ்டுக்கு முன்பு இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய அணிக்குள்ளேயே பயிற்சி ஆட்டத்திலும் விளையாடி வருகிறார்கள்.

பயிற்சி ஆட்டத்தில் ஸ்லிப் பகுதியில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, ஷுப்மன் கில்லுக்குக் காயம் ஏற்பட்டது. இவருடையக் கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தத் தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிபடுத்தப்படவில்லை.

இதனால், பெர்த் டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இவர் குணமடைய குறைந்தபட்சம் இரு வாரங்கள் தேவைப்படும் என பிசிசிஐ-க்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெர்த் டெஸ்டை பொறுத்தவரை இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஏற்கெனவே குழப்ப நிலை நீடிக்கிறது. கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இதன் காரணமாக, பெர்த் டெஸ்டில் ரோஹித் சர்மா பங்கேற்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

ஒருவேளை ரோஹித் சர்மா பெர்த் டெஸ்டில் விளையாடாத பட்சத்தில் தொடக்க பேட்டராக ஷுப்மன் கில் அல்லது கேஎல் ராகுல் களமிறங்கலாம் எனக் கூறப்பட்டது. தற்போது கில்லுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால், பேட்டிங்கில் குழப்ப நிலை மேலும் அதிகரித்துள்ளது.

இதன்மூலம், கேஎல் ராகுல் பங்கேற்பது ஏறத்தாழ உறுதியாகிறது. ஆஸ்திரேலியா 'ஏ'-வுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 'ஏ'-வுக்காக விளையாடிய துருவ் ஜுரெல் இரு இன்னிங்ஸிலும் முறையே 80 மற்றும் 68 ரன்கள் எடுத்தார். ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் முதல் டெஸ்டில் விளையாடாத பட்சத்தில், ஜுரெல் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது.

மாற்று தொடக்க பேட்டராக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் உள்ளார். இவற்றுக்கு மத்தியில், இந்தியா ஏ அணியில் இடம்பெற்றிருந்த தேவ்தத் படிக்கலை ஆஸ்திரேலியாவில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, பயிற்சி ஆட்டத்தின்போது கேஎல் ராகுலுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டது. எனினும், அச்சப்படக்கூடிய அளவுக்குப் பெரிய காயம் இல்லாததால் முதல் டெஸ்டில் விளையாட முழு உடற்தகுதியை அடைந்துவிடுவார் எனத் தெரிகிறது.