ஜெயிஸ்வால்
ஜெயிஸ்வால் ANI
தற்போதைய செய்திகள்

ஜெயிஸ்வால் 179* ரன்கள்: முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி

யோகேஷ் குமார்

முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணியில் ராகுல், ஜடேஜா, சிராஜுக்கு பதிலாக ரஜத் பட்டிதார், குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றனர். இங்கிலாந்து அணியில் லீச், மார்க் வுட்டுக்கு பதிலாக சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பெற்றனர்.

ஆரம்பம் முதல் நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா 14 ரன்களில் வெளியேறினார். இவரது விக்கெட்டை அறிமுக டெஸ்டில் விளையாடும் சோயிப் பஷீர் வீழ்த்தினார்.

இதன் பிறகு கில் மற்றும் ஜெயிஸ்வால் நல்ல கூட்டணியை அமைத்தனர். கில் 5 பவுண்டரிகளுடன் 34 ரன்களில் வெளியேற ஜெயிஸ்வால் சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினார். ஜெயிஸ்வாலுடன் இணைந்த ஐயரும் நிதானமாக விளையாடினார். இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெயிஸ்வால் டெஸ்டில் தனது 2-வது சதத்தை அடிக்க, ஐயர் 3 பவுண்டரிகளுடன் 27 ரன்களில் வெளியேறினார்.

ஜெயிஸ்வால் - ஐயர் கூட்டணி 90 ரன்கள் சேர்த்தது. இதன் பிறகு ஜெயிஸ்வால் - ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தனர். ரஜத் பட்டிதார் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்களில் வெளியேற, அடுத்ததாக வந்த அக்‌ஷர் படேல் 27 ரன்களிலும், பரத் 17 ரன்களிலும் வெளியேறினர்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜெயிஸ்வால் 5 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 179 ரன்கள் அடித்தார். அவருடன் அஸ்வின் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக சோயிப் பஷீர் மற்றும் ரேஹன் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஜெயிஸ்வால்