ஜடேஜா
ஜடேஜா ANI
தற்போதைய செய்திகள்

ரோஹித், ஜடேஜா சதம்: முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்!

யோகேஷ் குமார்

இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் சிராஜ், ஜடேஜா ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பெற்றனர். மேலும் சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோருக்கும் முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டது. இங்கிலாந்து அணியில் பஷீருக்கு பதிலாக மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. ஒரு பக்கம் கேப்டன் ரோஹித் சர்மா மட்டும் நிதானமாக விளையாட, மற்றொரு பக்கத்தில் ஜெயிஸ்வால் 10 ரன்னிலும், கில் ரன் எதுவும் எடுக்காமலும், படிதார் 5 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இந்திய அணி 33 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதன் பிறகு ரோஹித் சர்மாவும், ஜடேஜாவும் சிறப்பான கூட்டணியை அமைத்தனர். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து விக்கெட்டை இழக்காமல் விளையாடிய இந்திய அணி தேநீர் இடைவேளையின் போது 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அபாராமாக விளையாடிய இருவரும் அரைசதத்தை அடித்தனர்.

தேநீர் இடைவேளைக்கு பிறகு ரோஹித் சர்மா தனது 11-வது சதத்தை விளாசினார். 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் 131 ரன்கள் அடித்து ரோஹித் வெளியேறினார். ரோஹித் சர்மா - ஜடேஜா கூட்டணி 204 ரன்கள் குவித்தது. இதன் பிறகு சர்ஃபராஸ் கான் - ஜடேஜா கூட்டணி சேர்ந்தனர். அதிரடியாக விளையாடிய சர்ஃபராஸ் கான் தனது அறிமுக டெஸ்டில் அரைசதம் அடித்தார். ஒரு சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து எதிர்பாராத வகையில் ரன் அவுட் ஆனார் சர்ஃபராஸ் கான். இதைத் தொடர்ந்து ஜடேஜா சதம் அடித்தார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 110 ரன்களிலும், குல்தீப் யாதவ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளார்கள். இங்கிலாந்து அணியில் மார்க் வுட் அதிகபட்சமாக 3 விக்கெடுகளை வீழ்த்தினார்.