ராகுல் @icc
தற்போதைய செய்திகள்

ராகுலின் சிறப்பான சதம் - 245 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி

யோகேஷ் குமார்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் செஞ்சுரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் தென்னாப்பிரிக்க அணியில் டேவிட் பெடிங்காம், பர்கர் ஆகியோர் அறிமுகனார்கள்.

உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு முதல்முறையாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்கள் எடுத்து ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெயிஸ்வால் 4 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்ததாக கில் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜெயிஸ்வால் மற்றும் கில் ஆகியோரின் விக்கெட்டுகளை பர்கர் வீழ்த்தினார். இதன் பிறகு கோலி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் நல்ல கூட்டணியை அமைத்தனர்.

முதல் நாளின் உணவு இடைவேளைக்குப் பிறகு வீசப்பட்ட முதல் ஓவரில் ஐயர், ரபாடா பந்தில் போல்ட் ஆனார். இக்கூட்டணி 68 ரன்களை சேர்த்தது. ஐயர் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 31 ரன்களை எடுத்தார். இதன் பிறகு கோலியும் 5 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து ரபாடாவின் அருமையான பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த அஸ்வினும் 8 ரன்னில் வெளியேற இந்திய அணி 121 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.

ஒரு பக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மற்றொரு பக்கம் ராகுல் நிதானமாக விளையாடினார். அவருடன் இணைந்த ஷார்துல் தாக்குர் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  இதன்பிறகு பும்ரா 1 ரன்னில் வெளியேற ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. ராகுல் 70 ரன்களுடனும், சிராஜ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ராகுல் தொடர்ந்து அருமையாக விளையாட, மறுபக்கம் சிராஜ் 5 ரன்களுக்கு வெளியேறினார். ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்த நிலையில் ராகுல் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆரம்பம் முதல் நிதானமாக விளையாடிய ராகுல், சிக்ஸர் அடித்து சதத்தை எட்டினார். டெஸ்டில் அவரது 8-வது சதம் இது.

கடைசி விக்கெட்டாக ராகுலும் வெளியேற இந்திய அணி முதல் இன்னிங்ஸின் முடிவில் 245 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 4 சிக்சர்கள், 14 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தார் ராகுல். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளையும், பர்கர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.