ANI
தற்போதைய செய்திகள்

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: ரூ. 89,000-க்கு விற்பனை | Gold Rates |

ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,400 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி...

கிழக்கு நியூஸ்

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரு முறை உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், ரூ. 89,000-க்கு விற்பனை ஆகிறது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த திங்கட்கிழமை (செப்.29) அன்று ஒரு சவரன் ரூ. 86,160-க்கு விற்பனை ஆன நிலையில் அடுத்தடுத்த நாள்களில் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 30-ல் ரூ.86,880-க்கும், அக்டோபர் 1-ல் ரூ. 87,600-க்கும், அக்டோபர் 2-ல் ரூ. 87,600-க்கும் விற்பனை ஆனது. அதன் பின்னர் சிறிதளவு தங்கம் விலை குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், இன்று இரண்டு முறை விலை உயர்ந்தது. காலையில் தங்கம் கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,060-க்கும் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,480-க்கும் விற்பனை ஆனது. பின்னர் மீண்டும் மாலையில் வர்த்தகம் நிறைவடையும் நேரத்தில், கிராமுக்குக் கூடுதலாக ரூ. 65 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ. 11,125-க்கும், சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து, ரூ. 89,000-க்கும் அதிகரிகரித்தது. ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,400 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவின் 50% வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, சர்வதேச பொருளாதாரத்தில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தொடர் விலை ஏற்றம் காணப்படுகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி, ரூ. 166-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,66,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.