தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 3,680 அதிரடியாகக் குறைந்து ஒரு சவரன் ரூ. 92,320-க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவின் 50% வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, சர்வதேச பொருளாதாரத்தில் மாற்றம், தங்கத்தின் மீதான திடீர் முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை ஏறியும் இறங்கியும் வருகிறது.
குறிப்பாக கடந்த அக்டோபர் 17 அன்று வரலாறு காணாத அளவு ஒரு கிராம் தங்கம் ரூ. 12,200-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ. 97,600-க்கும் விற்பனை ஆனது. அதன்பின் தங்கத்தின் விலை சரிந்தும் உயர்ந்தும் காணப்பட்டது. தீபாவளிப் பண்டிகையின்போது, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 குறைந்து ஒரு சவரன் ரூ. 95,360-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 11,920-க்கும் விற்பனையானது.
ஆனால் நேற்று (அக்.21) சவரனுக்கு ரூ. 2,080 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 97,440-க்கும், ஒரு கிராம் ரூ. 12,180-க்கும் விற்பனையானது. பின் மாலையில் தங்கம் விலை குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 12,000-க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ. 96,000-க்கும் விற்பனையானது. இதையடுத்து இன்று மீண்டும் தங்கம் விலை காலையில் அதிரடியாக ரூ. 2,400 குறைந்தது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ. 300 குறைந்து ரூ. 11,700-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 2,400 குறைந்து ரூ. 93,600-க்கும் விற்பனையானது. இந்நிலையில் மாலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ. 160 குறைந்து, ரூ. 11,540-க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் ரூ. 1,280 குறைந்து ரூ. 92,320-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச அளவில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் 6.3% சரிந்து, ஒரு அவுன்ஸ் தங்கம் 4,082 அமெரிக்க டாலர் வரை விற்பனை செய்யப்படுவதாகத் தெரிய வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் தங்கம் விலை கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே தங்கம் விலை குறைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று வெள்ளி கிராமுக்கு ரூ. 2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.180-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,80,000-க்கும் விற்பனையாகிறது.