ரூ. 1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை! 
தற்போதைய செய்திகள்

ரூ. 1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை! | Gold Rates |

சர்வதேச பொருளாதார நிலைமை காரணமாக தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத வகையில் உயர்வு....

கிழக்கு நியூஸ்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.99,680-க்கு விற்பனை செய்யப்படுவது நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலைமை காரணமாக தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ள நிலையில், முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள், சேமிப்புகளில் முதலீடு செய்வதை குறைத்து, தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்வதால் விலை உயர்ந்து காணப்படுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு முன் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ரூ. 97,600-ஐ தொட்டது. அது அப்போதைய புதிய உச்சமாக இருந்தது. அதன்பின் விலை படிப்படியாக குறைந்தும் உயர்ந்து வந்தாலும், பெரும்பாலும் ஏறுமுகத்திலேயே காணப்பட்டது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பழையபடி விலை ‘கிடுகிடு'வென உயரத் தொடங்கியது. மாதத்தின் தொடக்கத்தில் ரூ. 96,000-ஐ கடந்த தங்கம் விலை, கடந்த டிசம்பர் 12 அன்று ஒரு கிராம் ரூ.12,370-க்கும், ஒரு சவரன் ரூ.98,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1 லட்சத்தை நெருங்கி வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 720 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 99,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 12,460-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 3-ம், கிலோவுக்கு ரூ. 3,000 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 213-க்கும், ஒரு கிலோ ரூ. 2.13 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The unprecedented rise in gold prices, with one sovereign of gold being sold at Rs. 99,680, has shocked jewellery enthusiasts.