தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ. 1,960 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 94,600-க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவின் 50% வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, சர்வதேச பொருளாதாரத்தில் மாற்றம், தங்கத்தின் மீதான திடீர் முதலீடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
குறிப்பாக அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அக்டோபர் 1 அன்று ரூ. 87,600-க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், ரூ. 6,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூ. 32,000-க்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக கடந்த அக்டோபர் 11 அன்று தங்கம் விலை அதிரடியாக இருமுறை உயர்ந்து ரூ. 92,000-ஐ கடந்தது. விரைவில் ரூ. 1 லட்சத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக ரூ. 1,960 உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் விலை, கிராமுக்கு ரூ. 245 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 11,825-க்கும், சவரனுக்கு ரூ. 1,960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 94,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தைக் கண்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 9 அதிகரித்து ரூ. 206 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி, ரூ. 2.6 லட்சத்திற்கு விற்பனையாகிறது. பண்டிகைக் காலம் நெருங்குவதால் விலை ஏறியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், வரலாறு காணாத விலையேற்றத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.