கோப்புப் படம் ANI
தற்போதைய செய்திகள்

மகன் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி: சைதை துரைசாமி அறிவிப்பு

காணாமல் போன தனது மகன் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி தருவதாகச் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

யோகேஷ் குமார்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் காணாமல் போன தனது மகன் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி தருவதாகச் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேசத்திற்குச் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மற்றும் அவரது நண்பர் கோபிநாத் ஆகியோர் சுற்றுலாவிற்காகச் சென்றிருந்தார்கள். அப்போது, அவர்கள் சென்றிருந்த கார் பிப்ரவரி 4 அன்று தீடீரென மலையில் இருந்து சட்லஜ் நதியில் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது.

விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், அவரது நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் வெற்றி துரைசாமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால் அவரை அம்மாநில காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் காணாமல் போன தனது மகன் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி தருவதாக சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். மேலும், சட்லஜ் நதி அருகே வசிக்கும் பழங்குடியின மக்களிடமும் தகவல் தெரிவிக்கும்படி காவல் துறை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.