ANI
ANI
தற்போதைய செய்திகள்

தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது: உச்ச நீதிமன்றம்

யோகேஷ் குமார்

தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது, அது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது என உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேர்தல் பத்திர சட்டத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவால் விசாரணை நடத்தப்பட்டது. மத்திய அரசு கடந்த 2017-ல் பொது பட்ஜெட்டில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் அரசியல் கட்சிகளுக்குத் தனி நபர்கள் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதிகளை வழங்கலாம் என்றும் மேலும் ஒருவர் எத்தனை பத்திரங்கள் வேண்டுமானாலும் வாங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் விவரம்:

* தேர்தல் பத்திரங்கள் மட்டுமே கருப்பு பணத்தை ஒழிக்க உதவாது. கருப்பு பணத்தை கட்டுப்படுத்த வேறு வழிகள் உள்ளன.

* தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது, அது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. மேலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

* தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்

* அரசியல் கட்சிகளுக்கு பெரிய நிறுவனங்கள் நிதி வழங்கும்போது, அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்புள்ளது.

* தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட பங்களிப்பு விவரங்களை மார்ச் 6-க்குள் வழங்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.