விவசாயிகள் பேரணி ANI
தற்போதைய செய்திகள்

விவசாயிகள் பேரணி: தில்லி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்

யோகேஷ் குமார்

தில்லி முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முதல் மார்ச் 12 வரை, ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

'தில்லி சலோ' என்கிற தலைப்பில் பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாகச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் தில்லி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2020-ல் இதே போன்ற ஒரு போராட்டம் ஒரு வருட காலமாக நடந்தது. விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உட்பட பல கோரிக்கைகளை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே இந்தப் பேரணியும் நடத்தப்படுகிறது.

எனவே விவசாயிகளின் இந்த பேரணியைத் தடுக்க தில்லி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களைத் தில்லி எல்லையிலேயே தடுத்து நிறுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில், தில்லி முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முதல் மார்ச் 12 வரை ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த பேரணியைத் தடுக்கும் விதமாக கான்கிரீட் தடுப்புகள், கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.