ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3,201 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜெர்மனி, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவதாக , கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி ஜெர்மனி சென்றடைந்த முதலமைச்சர், அங்கு இந்திய தூதரப் பொறுப்பாளர்களைச் சந்தித்தார். தொடர்ந்து, ஜெர்மனி வாழ் தமிழர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்றார். ஜெர்மனியில் தமிழரின் பாசத்தைக் கண்டு நெகிழ்ந்ததாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
அதைத் தொடர்ந்து, டசெல்டோர்ப் நகரில் செப்டம்பர் 1-ம் தேதி (இன்று) நடந்த உயர்நிலை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ”உங்கள் சகோதரன்தான் முதலமைச்சராக இருக்கிறேன் என்ற உரிமையோடு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள்” என்று அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து பல நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டார்.
இந்நிலையில் முதலமைச்சரின் பயணத்தால் ஜெர்மனியிலிருந்து ரூ.3,201 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவற்றுள் வாகனங்களின் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனம் ரூ.2000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,500 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், காற்றாலை டர்ப்பன் தயாரிக்கும் நார்டக்ஸ் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மோட்டார் நிறுவனம் ஒன்று ரூ.201 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 250 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் முதலமைச்சர் ஈர்த்துள்ள முதலீடுகளின் அடிப்படையில் மொத்தம் 6,250 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்குப் புறப்படும் முதலமைச்சர், செப்டம்பர் 2-ம் தேதி (நாளை) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றுத் தொழில்முனைவோரைச் சந்திக்கிறார். தொடர்ந்து லண்டலினும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.