47-வது சென்னைப் புத்தகக் காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
ஜன. 3-ம் தேதி தொடங்கவிருக்கும் புத்தகக் காட்சியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
துவக்கவிழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
மொத்தம் 19 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது.
மேலும் இதுகுறித்து தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தலைவர் சேது சொக்கலிங்கம், செயலாளர் எஸ்.கே. முருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"இந்த புத்தகக் காட்சியில் சுமார் 1000 ஸ்டால்கள் இடம்பெறும். 20 லட்சம் பேர் இதில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தை சேர்ந்த மிகசிறந்த அறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் உரை நடைபெறும். இந்த புத்தகக் காட்சி தொடர்பான முழு தகவல்கள் ஜனவரி 2-ம் தேதி வெளியிடப்படும்" என்றார்கள்.