தீபக் சஹார்
தீபக் சஹார் ANI
தற்போதைய செய்திகள்

தோனியின்றி சிஎஸ்கேவிற்கு விளையாடுவது கடினம்: தீபக் சஹார்

யோகேஷ் குமார்

ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பையில் விளையாடத் தயாராக உள்ளதாக தீபக் சஹார் கூறியுள்ளார்.

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான தீபக் சஹார் கடந்த சில தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தந்தையைப் பார்த்துக்கொண்ட தீபக் சஹார் ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பையில் விளையாடத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார்.

தீபக் சஹார் பேசியதாவது: “எனக்கு என் தந்தை தான் மிகவும் முக்கியம். இன்று நான் இந்த நிலைமையில் இருக்க அவர் தான் காரணம். உடல்நிலை பாதிக்கப்பட்ட சமயத்தில் அவருடன் இருப்பதே சரி என்று நினைத்தேன். ஒரு மகனாக நான் அதைத் தான் செய்ய வேண்டும். 25 நாட்கள் நான் அவருடன் இருந்தேன். அந்த சமயத்தில் ஒரு சில உடல் பயிற்சிகள் மட்டுமே நான் மேற்கொண்டேன். ஒரு மாதமாக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடவில்லை. அதனால் தான் ஆப்கானிஸ்தான் தொடரில் பங்கேற்கவில்லை. இதன் பிறகு என்சிஏ-விற்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டேன். தற்போது முழு உடற்தகுதியுடன் உள்ளேன். ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பையில் விளையாடத் தயாராக இருக்கிறேன். கடந்த இரு டி20 உலகக் கோப்பையிலும் காயம் காரணமாக விலகினேன்” என்றார்.

மேலும் எம்.எஸ் தோனி குறித்து அவர் பேசியதாவது: “நான் அவரை மூத்த அண்ணன் போல பார்க்கிறேன். அவரும் என்னை அவருடைய தம்பி போலத் தான் பார்க்கிறார் என நம்புகிறேன். அவரால் தான் எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஐபிஎல் 2018-ல் நான் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடினேன். அவர் இன்னும் 2-3 வருடங்கள் விளையாட வேண்டும். அவருக்கு ஏற்பட்ட காயம் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும். அதிலிருந்து அவர் குணமடைந்துவிட்டார். அவருடைய கடைசி ஆட்டத்தைச் சென்னையில் தான் விளையாடுவார் என அனைவரிடமும் கூறியுள்ளார். ஆனால் அவர் இல்லாமல் சிஎஸ்கேவிற்கு விளையாடுவது கடினம். அவர் பல வீரர்களை உருவாக்கியுள்ளார். ஒரு அணியில் நல்ல சூழலை உருவாக்குவது மிகவும் முக்கியம். நான் ராஜஸ்தான் அணிக்காக முதல் முறையாக விளையாடும் போது சிஎஸ்கே அணியில் உள்ள அதே சூழலை அங்கு உணர்ந்தேன்” என்றார்.