இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரணீத் ஓய்வு  @Sai Praneeth
தற்போதைய செய்திகள்

இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரணீத் ஓய்வு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் சாய் பிரணீத்.

யோகேஷ் குமார்

இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரணீத் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் எனும் பெருமையைப் பெற்றார் சாய் பிரணீத். 32 வயதான இவர், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடிய சாய் பிரணீத், 2019-ல் அர்ஜுனா விருதை வென்றார்.

சாய் பிரணீத் தனது ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராமில் கூறியதாவது:

“மிகவும் கலவையான உணர்ச்சிகளுடன், 24 ஆண்டுகளுக்கும் மேலாக எனது உயிர்நாடியாக இருந்த விளையாட்டிலிருந்து விடைபெறுகிறேன்.

நான் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கும் முன்பு, என்னை இங்கு அழைத்து வந்த இந்த பயணத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என் வாழ்க்கை முழுவதும் எனக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி. உங்களின் ஆதரவு எனது மிகப்பெரிய பலம். நீங்கள் ஒவ்வொரு முறை கை தட்டியதும், ஒவ்வொரு முறை கொடி அசைத்து ஆதரவு அளித்ததும் என்னை உற்சாகப்படுத்தியது. நீங்கள் என்னுடன் பயணித்தது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம்.

பேட்மிண்டன் தான் எனது முதல் காதல், எனது நிலையான துணை. பேட்மிண்டன் உடனான நினைவுகள் என்றென்றும் என் இதயத்தில் இருக்கும்.

எனது குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஊக்கம் தான் எனது வெற்றியின் அடித்தளம். உங்களின் ஆதரவு இல்லாமல், இது எதுவும் சாத்தியமில்லை.

எனது பயிற்சியாளர் கோபிசந்த் மற்றும் அனைத்து உதவி பயிற்சியாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி. சிறுவயதில் இருந்தே எனக்கு பயிற்சி அளித்த ஆரிஃப் சார் மற்றும் கோவர்தன் சாருக்கும் நன்றி” என்றார்.