‘அன்னபூரணி’  @NayantharaU
தற்போதைய செய்திகள்

‘அன்னபூரணி’ சர்ச்சை: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர்

சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கும் வரை அப்படத்தை நெட்ஃபிளிக்ஸிலிருந்து நீக்குவதாக, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது.

யோகேஷ் குமார்

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக ‘அன்னபூரணி’ படக்குழுவினர் மீது மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து, இப்படத்தின் தயாரிப்பாளர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நயன்தாரா, ஜெய், சத்யாராஜ், கே.எஸ் ரவிக்குமார் ஆகியோரின் நடிப்பில் டிசம்பர் 1 அன்று திரைக்கு வந்த படம் ‘அன்னபூரணி’. சமீபத்தில் இப்படம் ஓடிடி-யில் வெளியானது.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த சிவசேனா கட்சியின் முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், இப்படம் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக கூறி, மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். மேலும் இப்படம் லவ்ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இப்படத்தில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கதாநாயகன் “ராமர் இறைச்சி சாப்பிடுவார்” என கூறுவதுபோல வசனங்கள் அமைந்திருந்தது. மேலும் அர்ச்சகர் மகளான கதாநாயகி நமாஸ் செய்வது போல காட்சிகளும் இடம்பெற்றது. இவை அனைத்தும் வேண்டும் என்றே எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் ‘அன்னபூரணி’ படக்குழுவினர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

இந்நிலையில் தற்போது இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். படத்தில் சம்பந்தப்பட்ட காட்சியை நீக்கும் வரை அப்படத்தை நெட்ஃபிளிக்ஸிலிருந்து நீக்குவதாக, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது.