அண்ணா நூற்றாண்டு நூலகம் @ACLChennai
தற்போதைய செய்திகள்

அண்ணா நூற்றாண்டு நூலகம்: புதிதாக 20,000 புத்தகங்கள்!

நூலகத்தைப் பயன்படுத்தும் பல மாணவர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

யோகேஷ் குமார்

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான 20,000 புத்தகங்களை பிப்ரவரி மாதத்திற்குள் சேர்க்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூலகத்தைப் பயன்படுத்தும் பல மாணவர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நூலகத்தின் பொறுப்பாளர் சந்தான கார்த்திகேயன் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “தினசரி 800 பார்வையாளர்களை ஈர்க்கும் நூலகம். தமிழ் இலக்கியங்கள் மீது நூலகம் அதிக கவனம் செலுத்த வேண்டுமென வாசகர்கள் விரும்புகின்றனர். இதனை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். ஒவ்வொரு மாதமும் நூலகத்திற்கு சுமார் 30 கோரிக்கைகள் கிடைக்கின்றன. நாங்கள் 27,280 புத்தகங்களை ஆர்டர் செய்துள்ளோம். இப்போது 13,500 புத்தகங்கள் கிடைத்துள்ளன. கூடுதலாக சுமார் 4000 மின் புத்தகங்களும் சேர்க்கப்படும்” என்றார்.