யுவன் சங்கர் ராஜா 
சினிமா

அப்பா மீதான விமர்சனங்கள் என்னை பாதிக்காது: யுவன் சங்கர் ராஜா

யோகேஷ் குமார்

மங்காத்தா 2 படத்துக்கு என்னை இசைமைப்பாளராக தேர்ந்தெடுத்தால் நிச்சயமாகப் பணியாற்றுவேன் என்று யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடத்தும் இசை நிகழ்ச்சி (Live in Concert) ஜூலை 27 அன்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசியதாவது:

“கோட் படத்தில் இடம்பெற்றுள்ள சின்ன சின்ன கண்கள் பாடலை பாட உள்ளோம். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியானால் அந்த பாடலையும் பாடுவேன்.

சின்ன சின்ன கண்கள் பாடலை பவதாரணி தான் பாட வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனால், அந்த நேரத்தில் பவதாரணி மருத்துவமனையில் இருந்தார். அவர் உடல்நிலை சரியாகி வந்த பிறகு அவரை பாட வைக்கலாம் என்று நினைத்தோம். ஆனால், எதிர்பாராத விஷயங்கள் நடந்தது.

இதன் பிறகு என்ன செய்வதென்று யோசித்தோம். அப்போது தான் லால் சலாம் படத்தில் பம்பா பாக்யாவின் குரலை ஏஐ மூலம் ஏ.ஆர். ரஹ்மான் பயன்படுத்தினார். அதேபோல் நாங்களும் பவதாரணியின் குரலுக்காக பிரியங்காவை பாட வைத்தோம்.

எனது தந்தை இளையராஜா மீது வைக்கப்படும் விமர்சனங்கள் எதுவும் என்னை பாதித்தது இல்லை. விமர்சனங்களை நான் விமர்சனமாகவேப் பார்க்கிறேன்.

ஒருவருக்கு ஒரு பாடல் பிடிக்கவில்லை என்றால், அவர்களுக்கு எதனால் பிடிக்கவில்லை என்ற கருத்துக்களைப் படித்துவிட்டு நான் முன்னோக்கி சென்றுவிடுவேன்” என்றார்.

மேலும், மங்காத்தா 2 படத்துக்கு நீங்கள் இசையமைப்பீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, படத்தை யார் தயாரிக்கிறார்கள்? இயக்குநர் யார் என்று தெரிந்தால், அவர்கள் என்னை இசைமைப்பாளராக தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக இசையமைப்பேன்” என்றார்.