ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட எழுத்தாளர்கள் சுபா! படம்: https://www.facebook.com/suresh.subha
சினிமா

ரஜினியுடனான ஆன்மிகச் சந்திப்பு: பகிர்ந்துகொண்ட எழுத்தாளர் சுரேஷ் சுபா | Rajinikanth |

ஒரு படப்பிடிப்புக்காக ரஜினி மலேஷியா சென்றிருந்தபோது, அங்கு...

கிழக்கு நியூஸ்

ரஜினிகாந்த் டிசம்பர் 12 அன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருடனான ஆன்மிகச் சந்திப்பு குறித்து எழுத்தாளர் சுரேஷ் சுபா ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எழுத்தாளர் சுரேஷ் சுபாவின் பதிவு:

"நேற்று முழுவதும் சூப்பர் ஸ்டார் பிறந்தநாள் மற்றும் சினிமாவில் பொன்விழா என்று எந்தத் திசை திரும்பினாலும், ஒளியிலும், ஒலியிலும் பார்க்க/கேட்கத் தவறவில்லை.

அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவராயினும், இன்றைக்கு அவர் தமிழ்நாட்டின் முக்கியப் பொக்கிஷம். வெற்றியின் உச்சத்தைப் பார்த்த பின்னும், அதை மண்டையிலோ, தோளிலோ சுமக்காமல் இயல்பாக எளிமையாக இருப்பதில் மகிழ்ச்சிகொள்பவர்.

ரஜினி பற்றி நாங்கள் குறிப்பிடவும் ஒரு விஷயம் உண்டு.

  • ரஜினி அழைத்திருந்தார்.

  • ஓர் இளம் காலையில் அவர் இல்லத்தில் சந்திப்பு நடந்தது. மிக மிக உண்மை.

  • பேசினார். பேசினோம்.

  • எப்போது?

  • அவர் கட்சி தொடங்குவதாக அறிவித்த பின்னரா? இல்லை, அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த பின்னரா? சத்தியமாக இரண்டும் இல்லை.

இந்த சந்திப்பு பலப்பல மாதங்களுக்கு முன்னால் நடந்தது. ஆனால், அதை அப்போது பிரகடனப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்குத் தோன்றவில்லை.

எதற்காக? எழுத்தா? சினிமாவா? அரசியலா? ஆன்மிகமா?

விவரங்கள் முழுமையாகத் தெரிந்தபின்..,

அது இங்கே சிலருக்கு ஏமாற்றத்தையும், சிலருக்கு நிம்மதிப் பெருமூச்சையும் தரலாம்..

ஒரு படப்பிடிப்புக்காக ரஜினி மலேஷியா சென்றிருந்தபோது, அங்கு ஸ்வாமி ராமா என்ற ஹிமாலய குருவின் நேரடி சீடராயிருந்த மோஹன் சுவாமியைச் சந்திக்கிறார். ஸ்வாமி ராமாவுடனான தன் அனுபவங்களைத் தொகுத்து, சீடர் மோஹன் சுவாமி ஆங்கிலத்தில் ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார்.

அதை ரஜினி படிக்கிறார். ஸ்வாமி ராமாவின் மீது இருந்த அபரிமிதமான மரியாதை இன்னும் கூடிப்போகிறது.

அந்தப் புத்தகத்துக்கு ஒரு முன்னுரையை ஆசையாக எழுதித் தருகிறார்.

சென்னை திரும்பியபின், அப்புத்தகத்தைத் தமிழ் வாசகர்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்றொரு விருப்பம் வருகிறது.

விகடனின் பொறுப்பாசிரியராக இருந்த ரா.கண்ணனை இதற்காகத் தொடர்புகொள்கிறார். கண்ணன் எங்களைத் தொடர்புகொண்டு செய்துதர முடியுமா என்று கேட்கிறார்.

ஹிமாலய குரு ஸ்வாமி ராமாவின் “Living with the Himalayan Masters” என்ற புத்தகத்தைப் படித்து ரசித்திருந்த நாங்கள் அவர் சீடரின் அனுபங்களை அறியும் ஆவலோடு சவாலை ஏற்க விரும்புகிறோம்.

“முதலில் ஓர் அத்தியாயத்தை எழுதித் தருகிறோம். ரஜினிக்குத் திருப்தியாயிருந்தால், தொடர்கிறோம்” என்று சொல்கிறோம். தமிழில் நாங்கள் எழுதி அனுப்பிய பிறகு இரண்டே நாட்களில் ஃபோன் வருகிறது.

“சார் பேசணும்கறாரு..” என்று உதவியாளர் சொன்னதும், ரஜினியின் குரல் வருகிறது: “சூப்ப்பர்.. சூப்ப்பர்.. சூப்ப்பராயிருக்கு.. கரெக்டா எடிட் பண்ணியிருக்கீங்க..” என்று எக்ஸ்பிரஸ் வேகத்தில் சொல்கிறார். “நீங்க தொடர்ந்து பண்ணுங்க..”

சில மாதங்களில் எழுதி முடித்தபின்.. அவர் வீட்டில் எங்கள் சந்திப்பு நிகழ்கிறது.

ரஜினியை வழிநடத்தும் ஆன்மிக குருமார்களின் ஒளிப்படங்களும் ஓவியங்களும் அலங்கரித்த அந்த அறையில், கருப்பு வேட்டியும், தூய வெள்ளைச் சட்டையும் அணிந்து, செய்தித்தாளை படித்துக்கொண்டிருக்கிறார், ரஜினி.

எங்களைப் பார்த்ததும், பேப்பரை மடித்து வைத்துவிட்டு, பேச ஆரம்பிக்கிறார்.

எங்கள் எழுத்து பற்றி, நாங்கள் பணிபுரிந்திருந்த சினிமாக்கள் பற்றி, அவருடன் பணிபுரிவதற்கான வாய்ப்பு வந்தபோது நாங்கள் ஏற்க முடியாமல் வேறொரு படத்திற்கான விவாதத்தில் ஈடுபட்டிருந்தது பற்றி, எங்கள் நண்பர் அவருடன் இயக்குவதாயிருந்த திரைப்படம் நிகழாதது பற்றியெல்லாமும் சற்று அலசிவிட்டு,

நாங்கள் எழுத்தாக்கம் செய்து தந்த புத்தகம் குறித்து தன்னுடைய பரிபூரணத் திருப்தியைத் தெரிவிக்கிறார்.

அடுத்து தானாகவே எங்கள் பேச்சு ஆன்மிகம் பற்றித் திரும்புகிறது. எங்கள் அனுபவங்கள், அவருடைய அனுபவங்கள் என்று பரஸ்பரப் பகிர்தல் முடிந்து..

ஆன்மிகத்தில் குருவைத் தேடி சிஷ்யன் போகிறானா, சீடனைத் தேடி குரு போகிறாரா என்பதைப் பற்றியெல்லாம் சற்று நேரம் மனம்விட்டு உரையாடுகிறார்.

“நாம அடிக்கடி சந்திக்கணும்.. சினிமா பத்திப் பேசாம, ஆன்மிகம் பத்திப் பேசுவோம்” என்கிறார்.

அந்தப் புத்தக வெளியீட்டு விழாவை பெரிய அளவில் ஏற்பாடுசெய்து, அந்த விழாவில் சினிமா, அரசியல் இரண்டையும் அறவே பேசாமல், ஆன்மிகம் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டிருப்பதைச் சொல்கிறார்.

சந்திப்பு முடிந்து புறப்பட எழுந்திருக்கிறோம். உதவியாளரை அழைத்து, எங்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்கிறார். விடைபெறுகிறோம்.

ஆனால் விரைவிலேயே அப்போதைய சூழல் திடீரென சற்று மாறுகிறது.

ரஜினி மேடையேறினால், சினிமா பற்றியும், அரசியல் பற்றியும் பேசாமல் தவிர்க்கவே முடியாது என்ற நிலை வருகிறது.

அதனால், பெரிய அளவில் நூல் வெளியீட்டு விழா என்ற அவருடைய விருப்பம் நிறைவேறாமலேயே நூல் விகடன் பிரசுரம் மூலம் வெளியாகிறது. தொடர்ந்து சினிமாக்களில் அவர் பரபரப்பாக அதிக நேரம் செலவு செய்ய நேர்ந்தபின், எங்களிடம் குறிப்பிட்டபடி அடிக்கடி சந்தித்து ஆன்மிகம் பற்றி அளவளாவ இயலாமல் போயிருக்கலாம்.

சந்திப்பு நிகழ்ந்து இத்தனை மாதங்கள் சொல்லாமல், இப்போது ஏன் சொல்கிறோம்? தமிழ்நாடே கொண்டாடும் அவருடைய சாதனைகள் பற்றி மட்டும் அல்லாமல், எங்கள் சந்திப்பு பற்றியும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே என்று.

ரஜினியைத் தனியே சந்தித்து மனம்விட்டு உரையாடிக்கொண்டிருந்தபோதும், அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்றெல்லாம் அவரிடம் நாங்கள் கேட்கவில்லை.

அதற்கான அவசியம் வந்தால், காலமே அதற்கு வழி வகுக்கும் என்று அவரைப்போலவே ஆன்மிகத்தில் நம்பிக்கைகொண்ட நாங்களும் கருதுகிறோம்.

பி.கு.: பலர் கேட்டிருப்பதால், விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கும் அப்புத்தகத்தின் தலைப்பு: 'இமய குருவுடன் ஓர் இதயப் பயணம்'

ஆங்கில மூல நூலின் தலைப்பு: Journey with a Himalayan Master Swami Rama.

-கொஞ்சம் மீள்" என்று பதிவிட்டுள்ளார்.

Writer Suresh Subha shares his experience of Meeting on Rajinikanth on Spirituality

Rajinikanth | Suresh Subha | Writer Suresh |