படம்: https://www.youtube.com/user/24HSeries
சினிமா

கார் பந்தயம் முடியும் வரை படங்களில் நடிக்கப் போவதில்லை: அஜித் குமார்

"அக்டோபர் முதல் மார்ச் இடையில் கார் பந்தயக் காலம் தொடங்கும் முன் நான் படங்களில் நடிப்பேன்."

கிழக்கு நியூஸ்

நடப்பு கார் பந்தயப் பருவம் முடியும் வரை புதிய படங்களில் நடிக்கப் போவதில்லை என அஜித் குமார் தெரிவித்துள்ளார்.

அஜித் குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியை உருவாக்கியுள்ள அஜித் குமார், துபாயில் நடைபெறும் 24ஹெச் சீரிஸில் பங்கெடுக்கிறார். 2025-ல் 24ஹெச் ஐரோப்பிய பருவம் முழுக்கப் பங்கெடுக்கப்போவதாக அஜித் குமார் உறுதியளித்துள்ளார். கார் பந்தயத்துக்கான பயிற்சியின்போது, அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானது. எனினும், அஜித் குமாருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.

கார் பந்தயம் மற்றும் திரைப்படங்களில் நடிப்பது குறித்து பேசிய அஜித் குமார், நடப்பு கார் பந்தயப் பருவம் முடியும் வரை புதிய படங்களில் ஒப்பந்தமாகப்போவதில்லை என்றார்.

"18 வயதில் இந்தியாவில் மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடத் தொடங்கினேன். அதன்பிறகு, வேலையில் பிஸியாகி விட்டேன். என்னுடைய 20, 21 வயது வரை மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடவில்லை. பிறகு 1993 வரை மீண்டும் ஈடுபட்டேன்.

இதன்பிறகு, மீண்டும் சினிமா துறையில் பிஸியாகி விட்டேன். 2002-ல் எனக்கு 32 வயது. மீண்டும் மோட்டார் பந்தயத்தில் ஈடுபட வேண்டும் என அப்போது முடிவெடுத்தேன். மோட்டார் சைக்கிள் பதில் கார் பந்தயத்தில் ஈடுபட முடிவெடுத்தேன். இதிலிருந்து என்னுடையப் பயணம் தொடங்கியது.

2002-ல் மீண்டும் மோட்டார் பந்தயத்தில் ஈடுபடத் தொடங்கினேன். இந்தியாவில் தேசிய சாம்பியன்ஷிப்பில் பங்கெடுத்தேன்.

2003-ல் ஃபார்முலா பிஎம்டபிள்யு ஆசிய சாம்பியன்ஷிப்பில், அந்தப் பருவம் முழுவதும் பங்கெடுத்தேன். இதில் நிறைவு செய்துவிட்டு, 2004-ல் பிரிட்டிஷ் ஃபார்முலா 3-ல் ஸ்காலர்ஷிப் கிளாஸில் பங்கெடுத்தேன். துரதிருஷ்டவசமாக, எனக்கு இருந்த பொறுப்புகளால் அந்தப் பருவத்தை என்னால் முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை. ஒரே நேரத்தில் இரு படகில் பயணம் செய்வது போல இருந்தது.

சில காலம் காத்திருந்து 2010-ல் ஐரோப்பிய ஃபார்முலா 2 பருவத்தில் கார் பந்தியத்தில் பங்குபெற்றார். இருந்தாலும், என்னுடையத் திரைப்படங்கள் காரணமாக என்னால் சில பந்தயங்களில் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது" என்றார் அஜித் குமார்.

கார் பந்தயங்களில் கலந்துகொள்வது குறித்து திரைப்பட ஒப்பந்தங்களில் இடம்பெறுமா? கார் பந்தயத்தில் பங்கெடுக்கக் கூடாது என தயாரிப்பாளர்கள் சொல்வார்களா? என்று கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அஜித் குமார், "நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என யாரும் என்னைச் சொல்லக் கூடாது.

தற்போதைய நிலையில் நான் மோட்டார் விளையாட்டில் வெறும் பந்தயத்தில் பங்கெடுப்பவராக மட்டுமல்லாமல் அணியின் உரிமையாளராகவும் பங்கெடுக்கவுள்ளதால், கார் பந்தயப் பருவம் முடியும் வரை நான் புதிய படங்களில் ஒப்பந்தமாகப் போவதில்லை.

அக்டோபர் முதல் மார்ச் இடையில் கார் பந்தயக் காலம் தொடங்கும் முன் நான் படங்களில் நடிப்பேன். எனவே, யாரும் கவலை கொள்ள வேண்டாம். கார் பந்தயத்தில் ஈடுபடும்போது, நானும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட முடியும்" என்றார் அவர்.

அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி வரும் ஏப்ரல் 10 அன்று வெளியாகும் என படக் குழு அறிவித்துள்ளது. விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகாது என லைகா தயாரிப்பு நிறுவனம் கடந்த டிசம்பர் 31 அன்று அறிவித்த நிலையில், புதிய வெளியீட்டுத் தேதி குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் உள்ளது.