விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த பருவம், நாளை (அக்.5) முதல் தொடங்குகிறது. அதனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தொடக்க காலத்தில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த இந்நிகழ்ச்சியைக் கடந்த வருடத்திலிருந்து விஜய் சேதுபதி வழிநடத்துகிறார். இந்த வேளையில், இதுவரை நடந்த பிக் பாஸ் 1 முதல் 8 வரையிலான நிகழ்ச்சிகளின் வெற்றியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்.
முத்துக்குமரன் ஜெகதீசன் - பிக் பாஸ் 8
விஜய் தொலைக்காட்சியின் ’தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த முத்துக்குமரன் ஜெகதீசன், பிக் பாஸ் 8-ல் நம்பகத் தன்மையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி வெற்றி பெற்றார். மேடைப் பேச்சாளரான அவர், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகிறார்.
அர்ச்சனா ரவிச்சந்திரன் - பிக் பாஸ் 7
ராஜா ராணி 2 தொடரில் நடித்து வந்த அர்ச்சனா ரவிச்சந்திரன், பிக் பாஸ் 7-ன் வெற்றியாளர் ஆனார். தற்போது மொரட்டு சிங்கிள் 2, காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சின்னத்திரை தொடர்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். டிமாண்டி காலனி 2 படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள்ளும் அடி எடுத்து வைத்துள்ளார்.
முகமது அசீம் - பிக் பாஸ் 6
சின்னத்திரை தொடர்களான மாயா, பிரியமானவள், பகல் நிலவு ஆகியவற்றில் நடித்த முகமது அசீம், பிக் பாஸ் 6-ல் வெற்றிபெற்றார். தற்போது பிக் பாஸாகக் குரல் கொடுத்து வரும் சாஷோவுடன் இணைந்து கலைமகன் முபாரக் இயக்கத்தில் உருவாகி வரும் த்ரில்லர் படத்தில் வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார். இந்த ஆண்டு நிகழ்ச்சியில் ரன்னர்-அப் ஆக வந்த விக்ரமன், படங்களில் நடித்து வருவதுடன் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
பாலாஜி முருகதாஸ் - பிக் பாஸ் அல்டிமேட்
மாடலும் நடிகருமான பாலாஜி முருகதாஸ், பிக் பாஸ் 4-ன் ரன்னர் அப் ஆக தேர்வானார். ஆனால், அதன்பின் நடத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் போட்டியில் வெற்றிபெற்றார். தற்போது, நானே வருவேன், நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் நடித்த அவர் ஃபயர் படம் மூலம் கதாநாயகன் ஆனார். தற்போது சூர்யாவின் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.
ராஜு ஜெயமோகன் - பிக் பாஸ் 5
பிக் பாஸ் 5-ன் வெற்றியாளரான ராஜு ஜெயமோகன், சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் மற்றொரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி 6-ன் வெற்றியாளரும் ஆனார். தற்போது வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து வருகிறார்.
ஆரி அர்ஜுனன் - பிக் பாஸ் 4
சென்னையில் ஜல்லக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தின் தொடக்கத்தில் பங்கேற்று புகழ்பெற்ற ஆரி அர்ஜுனன், பிக் பாஸ் 4-ல் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான், அலேகா, பகவான் போன்ற படங்களில் நடித்தார். தற்போது வா தமிழா வா என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
முகேன் ராவ் - பிக் பாஸ் 3
மலேசியாவைச் சேர்ந்த பாடகரும் நடிகருமான முகேன் ராவ், பிக் பாஸ் 3-ன் வெற்றியாளராக ஆனார். அதன் பின்னர் வேலன் என்ற படத்தில் அவர் நடித்தார். தற்போது நடிப்பு மற்றும் இசைத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
ரித்விகா - பிக் பாஸ் 2
பரதேசி, மதராஸ், கபாலி, ஒரு நாள் கூத்து பொன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற ரித்விகா, பிக் பாஸ் 2-ல் வெற்றி பெற்றார். வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் வெளியான தண்டகாரண்யம் படத்திலும் நடித்துள்ளார். எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திலும் நடித்து வருகிறார்.
ஆரவ் - பிக் பாஸ் 1
ஓகே கண்மணி, சைத்தான் போன்ற படங்களில் நடித்த மாடலும் நடிகருமான ஆரவ் நபீஸ் கிசார், பிக் பாஸ் 1-ல் வெற்றியாளர் ஆனார். அதன்பின் கலகத் தலைவன், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன், விடாமுயற்சி போன்ற படங்களில் நடித்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் நடித்த ராஜபீமா என்ற படம் வெளியானது.