அமரன் படத்தில் மேஜர் முகுந்தின் பிராமண அடையாளம் மறைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, அப்படத்தின் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்பட பலர் நடித்த படம் ‘அமரன்’. இசை - ஜி.வி. பிரகாஷ் குமார்.
இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். இப்படம் அக்.31 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் மேஜர் முகுந்தின் பிராமண அடையாளம் மறைக்கப்பட்டதா என பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் கேள்வி எழுப்ப, அதற்குரிய விளக்கத்தை இயக்குநர் அளித்துள்ளார்.
பட்டுக்கோட்டை பிரபாகரின் பதிவு
அமரன் படத்தின் நிஜ கதாநாயகன் மேஜர் முகுந்த் வரதராஜன் பிராமண சமூகத்தைச் சார்ந்தவர் என்பதன் ஒரு பதிவுகூட படத்தில் இல்லையே என்று சிலர் பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்கள்.
படத்தில் சிவகார்த்திகேயன் தன் தந்தையை நைனா என்று அழைப்பதாகக் காட்டியிருப்பதால் எனக்கும் அதே கேள்வி இருந்தது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை அழைத்து படத்தைப் பாராட்டிவிட்டு என் மற்றும் சிலரின் சந்தேகம் குறித்து கேட்டேன்.
அவர் சொன்னது
மேஜர் முகுந்த் தன் தந்தையை நைனா என்றுதான் அழைப்பார். இதை பேட்டியில் தந்தை வரதராஜனே சொல்லியிருக்கிறார். ஆடியோ விழாவில் மேடையில் சிவகார்த்திகேயனே இதைக் குறிப்பிட்டுருப்பார்.
அடுத்து நான் கேட்டது
திருமண முறையிலும் அந்த சமூகத்தின் முறை தெரியவில்லையே?
அவர் பதில்
மூன்று நாள் திருமணம் நடத்த வேண்டும் என்று சொன்னபோது ரெஜிஸ்தர் மேரேஜ் மட்டும் போதுமே என்று மறுத்தவர் அவர். இந்தப் படம் காஷ்மீரி மொழி உள்பட பல மொழிகளில் வருகிறது. காஷ்மீரில் நிகழும் இந்தக் கதையை யார் மனமும் புண்படாமல் ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கை வரலாறாக சொல்வது மட்டுமே எங்கள் நோக்கம்.
நான்
இந்தப் படத்தைத் தயாரித்துள்ள கமல் ஹாசன் எந்தச் சமூகம் என்பது உலகம் அறியும். எனவே ஒரு சமூகப் பின்னணியை வேண்டுமென்றே மறைத்திருக்க வாய்ப்பில்லை. முகுந்த் பாரதியாரின் பாடலை விரும்பிப் பாடுகிறவர். அவர் தன்னை ஜாதி, மதம் கடந்த ஒரு ராணுவ வீரனாக மட்டுமே உணர்ந்து வாழ்ந்திருக்கிறார் என்பது புரிகிறது.
ஆனாலும் அடுத்த பேட்டியில் இது குறித்து விளக்கமாகப் பேசி விடுங்கள். ஒரு சிலரின் சந்தேகத்திற்கு விடையாக இருக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.