ரெட் ஜெயண்ட் மீது விஷால் சாடல் @VishalKOfficial
சினிமா

தமிழ் சினிமாவைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா?: ரெட் ஜெயண்ட் மீது விஷால் சாடல்

யோகேஷ் குமார்

மார்க் ஆண்டனி படத்தை ரிலீஸ் செய்வதில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் எற்பட்ட பிரச்னை குறித்து நடிகர் விஷால் பேசியுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளியாக மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்நிலையில் சமீபத்தில் கலாட்டா யூடியூப் சேனலில் பேசிய விஷால், மார்க் ஆண்டனி படத்தை தள்ளி ரிலீஸ் செய்ய சொன்னதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் பேசியதாவது:

“எனது ‘எனிமி’ படம் தீபாவளிக்கு வெளியான போது ஒரு விஷயம் நடந்தது. ஆனால், அது உதயநிதிக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை. ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் இருக்கும் ஒரு நபருடன் எனக்கு ஒரு பெரிய பிரச்னை ஏற்பட்டது உண்மைதான்.

ஒரு படத்தை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. யாருக்கும் தமிழ் சினிமா சொந்தம் கிடையாது. சினிமா என் கையில்தான் இருக்கிறது என்று சொன்னவர்கள் யாரும் நல்லா இருந்ததாக சரித்திரம் கிடையாது. எனக்காக நான் அதை பேசவில்லை. என்னுடைய தயாரிப்பாளர் வட்டி கட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்.

ஏசி அறையில் உட்கார்ந்து திரையரங்குகளுக்கு போன் செய்து என் படத்தை ரிலீஸ் செய், வேறு எந்தப் படமும் வரக்கூடாது என்று சொல்லும் தயாரிப்பாளர் அல்ல. வட்டிக்கு வாங்கி, வியர்வை சிந்தி ஒரு படம் எடுத்தால், அதை தள்ளி ரிலீஸ் செய்ய சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?.

தமிழ் சினிமாவை நீங்கள்தான் குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களா? என்று ரெட் ஜெயண்ட்டில் இருக்கும் அந்த ஒரு நபரிடம் கேட்டேன். அந்த நபர் எனக்கு தெரிந்த நபர். அவரை நான்தான் உதயாவிடம் சேர்த்து விட்டேன். அவரே இப்படி ஒரு செயலை செய்யும்போது என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மார்க் ஆண்டனி படத்துக்காக என்னுடைய தயாரிப்பாளர் ரூ. 65 கோடி செலவு செய்திருக்கிறார். ஒன்றரை மாதமாக படம் வெளிவரும் தேதிக்காக காத்திருக்கும்போது அதனை தள்ளி ரிலீஸ் செய்ய சொன்னவுடன் எனக்கு கோபம் வந்துவிட்டது.

நீங்கள் மட்டும்தான் உங்கள் படத்தை ரிலீஸ் செய்து நீங்கள் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று ஏதவாது விதி இருக்கிறதா?. சொன்ன தேதியில் ரிலீஸ் செய்ததால்தான் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நல்ல எதிர்காலம் கிடைத்தது. எனக்கும் ஒரு நல்ல வெற்றி கிடைத்தது” என்றார்.