விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் போட்டியிலிருந்து விலகியது. டிசம்பர் 31 அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து நிறைய புதிய படங்கள் பொங்கல் போட்டியில் இணைந்தன. அந்த வரிசையில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய அறிவிப்புதான் மதகஜராஜா வெளியீடு.
விஷால், சந்தானம், சுந்தர் சி, விஜய் ஆண்டனி கூட்டணியில் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு தயாரான படம் தான் மதகஜராஜா. பல்வேறு சிக்கல்கள் காரணமாக இந்தப் படம் அப்போது வெளியாகவில்லை. தொடர்ந்து வெளியாகாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில் பொங்கல் வெளியீடாக இந்தப் படம் வருகிறது.
பொங்கல் வெளியீட்டை முன்னிட்டு பட வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஷால், நடுக்கத்துடன் காணப்பட்டார். மைக்கை சரியாகப் பிடித்து பேச முடியாத அளவுக்கு கைகளில் நடுக்கம் இருந்தன. அவருக்கு காய்ச்சல் இருப்பதாக நிகழ்ச்சியின்போதே கூறப்பட்டது.
இருந்தபோதிலும், சமூக ஊடகங்களில் வழக்கம்போல் பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின.
இந்த நிலையில், விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாக அப்போலோ மருத்துவமனை மருத்துவரின் மருத்துவக் குறிப்பு வெளியாகியுள்ளது. காய்ச்சலுக்கான சிகிச்சைப் பெற்றுக்கொண்டு, முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று விஷாலுக்கான மருத்துவக் குறிப்பில் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.