சினிமா

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் விஷால்?

இதுபோன்ற வதந்திகளை யார் பரப்பியிருப்பார்கள் என்று எனக்கு தெரியும்.

யோகேஷ் குமார்

சிவகார்த்திகேயனின் 25-வது படத்தில் விஷால் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை விஷால் மறுத்துள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் எஸ்கே25 படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இப்படத்தில் விஷால் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதற்கு விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார்.

டிடி நெக்ஸ்டுக்கு அளித்த பேட்டியில் விஷால் தெரிவித்துள்ளதாவது:

“நான் வில்லனாக நடிக்கவில்லை. என்னுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறேன். இதுபோன்ற வதந்திகளை யார் பரப்பியிருப்பார்கள் என்று எனக்கு தெரியும். 20 வருட கடின உழைப்புக்கு பிறகும் என்னை வில்லனாக பார்க்க சிலர் விரும்புகிறார்கள். அதற்கு நான் தற்போது தயாராக இல்லை”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.