சினிமாவில் இருந்து சிறிய இடைவேளை எடுத்துக்கொள்வதாகக் கூறியதை அனைவரும் தவறாக புரிந்துக்கொண்டார்கள் என நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்துள்ளார்.
விக்ராந்த் மாஸ்ஸி, 2013-ல் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.
11 ஆண்டுகளாக நடித்துவரும் விக்ராந்த் மாஸ்ஸிக்கு, கடந்த வருடம் வெளியான ‘12th fail' படம் பேரும் புகழையும் அளித்தது.
அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படமும் வெற்றியடைந்த நிலையில், 2025-க்குப் பிறகு திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் விக்ராந்த் மாஸ்ஸி.
ஓய்வுக்குக் காரணமாக அவர் கூறுகையில், “கடந்த சில ஆண்டுகள் எனக்கு அற்புதமாக அமைந்தன. ஆனால், ஒரு கணவராக, தந்தையாக, மகனாக எனது வீட்டைக் கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரும் 2025-ல் கடைசியாக ஒரு முறை சந்திப்போம். கடைசி இரு படங்கள் மற்றும் பல வருடங்களின் நினைவுகளுடன் விடைபெறுகிறேன்” என்று விக்ராந்த் மாஸ்ஸி கூறியது ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் சக நடிகர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சினிமாவில் இருந்து சிறிய இடைவேளை எடுத்துக்கொள்வதாகக் கூறியதை அனைவரும் தவறாக புரிந்துக்கொண்டார்கள் என்று கூறி தனது ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்றுள்ளார் நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி.
இது குறித்து விக்ராந்த் மாஸ்ஸி கூறியதாவது:
“எனக்கு நடிக்க மட்டுமே தெரியும். எனக்கு அனைத்தையும் கொடுத்ததும் நடிப்புதான். நான் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்த காரணத்தால் சிறிய இடைவேளை எடுக்கவேண்டும் என நினைத்தேன். என்னுடைய பதிவைப் பார்த்து நான் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அனைவரும் தவறாக புரிந்துக்கொண்டார்கள். எனது குடும்பத்தையும் எனது உடல்நிலையையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு தெரிவித்தேன். சரியான நேரத்தில் மீண்டும் நடிப்பேன்” என்றார்.