சினிமா

புளித்துப்போன பழைய பழிவாங்கல் கதை, ஆனால்..: தி கோட் விமர்சனம்

சுவாமிநாதன்

சண்டைக் காட்சிகளில் மிளிர்கிறார், சாதாரணப் படங்களாக இருந்தாலும் தோளில் சுமக்கிறார், உடல்கட்டமைப்பில் அசர வைக்கிறார், சந்தையில் உச்சத்தில் இருக்கிறார். இவ்வளவு இருந்தும் கில்லி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி போன்று மிரட்டலான ஒரு முழு நீள மாஸ் கமெர்ஷியல் படம் அமையவில்லை என்ற குறை மட்டும் இன்னும் அகலவில்லை.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஜெயராம் தலைமையிலான குழுவில் ரகசியமாகப் பயங்கரவாதத் தடுப்புச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கென்யாவில் ஒரு பயங்கரவாதக் குழுவை ஒழிப்பதில் கதை தொடங்குகிறது. இது காந்தி கதாபாத்திரமாக வரும் விஜயின் வாழ்க்கையில் நேரடியான தாக்கத்தை உண்டாக்கி ஒரு பேரழிவு சம்பவத்தை ஏற்படுத்துகிறது. இந்தச் சம்பவம் விஜயின் குடும்ப வாழ்க்கையில் என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்குகிறது, பிற்காலத்தில் விஜயின் குடும்ப வாழ்க்கையை எப்படி மலரச் செய்கிறது, இதனால் ஏற்படும் இழப்புகள் என்ன என்பதுதான் தி கோட் திரைப்படத்தின் கதை, திரைக்கதை.

தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத ஒரு கதை என்று சொல்லக்கூடிய அளவில் இல்லாமல் பார்த்துப் பழகி புளித்துப்போன ஒரு பழைய பழிவாங்கல் கதை. திரைக்கதையிலும் பெரிய புதுமை எதுவும் இல்லை. இதனால்தான் என்னவோ சிங்கம் 2, விஷ்ணு (விஜயின் பழைய படம்), பட்டணத்தில் பூதம்/குரு சிஷ்யன் போன்ற படங்களின் நினைவுகள் வருகின்றன.

வெங்கட் பிரபு படங்களில் வழக்கமாக இருக்கும் ட்விஸ்டுகள் இந்தப் படத்திலும் உள்ளன. ஆனால், இதை நான் எதிர்பார்க்கவே இல்லை/என்னவொரு ஆச்சர்யம் வகையறா ட்விஸ்டுகள் படத்தில் இல்லை. வில்லன் கதாபாத்திரத்துக்கு வலு சேர்ப்பது கதாநாயகனுக்கு வலுகூட்டும். இதில் சொதப்பியிருக்கிறார்கள். சுவாரஸ்யம் இல்லாத ஃபிளாஷ்பேக். நிறைய இடங்களில் உரிய விவரங்கள் இல்லை. இதை ஏன் செய்கிறார்கள் இதன் நோக்கம் என்ன என்பதெல்லாம் ரசிகர்கள்களுக்குக் கடத்தப்படவில்லை. வெறும் சண்டைகளாக மட்டுமே உள்ளன.

உதாரணத்துக்கு தமிழ் தவிர்த்து மற்ற மொழிகளில் வெளியான டிரெய்லர்களில் மிஷன் இம்பாசிபில் இசையை ஒலித்தபடி விஜய் வருவார். நிச்சயமாக மிகவும் மாஸாக வந்திருக்க வேண்டிய இடம் இது. ஆனால், விஜய் மற்றும் குழுவினர் ஏன் அங்கு செல்ல வேண்டும், அங்கு என்ன செய்கிறார்கள், இதனால் யாருக்கு என்ன பலன் என எதுவுமே தெளிவுபடுத்தப்படவில்லை. எழுத்தில் எதுவும் இல்லாமல் வெறுமென பாராசூட்டில் மாஸாக தப்பிக்கிறார் என்பது மட்டுமே ஒரு மாஸ் உணர்வைத் தந்திராது அல்லவா?

எழுத்தில் ஆழம் இல்லை என்ற பிரச்னை கதாபாத்திரங்களிலும் வெளிப்படுகிறது. படத்தில் லைலா கதாபாத்திரம் எதற்கு? மீனாட்சி சௌதரி கதாபாத்திரத்தில் வலு இல்லை. பிரேம்ஜியைப் படத்துக்குள் திணித்ததைப்போல இருந்தது. வைபவ் யார்? மோகனின் பின்னணி என்ன?

கம்ப்யூட்டரில் ஹேக் செய்யத் தெரிந்தால் எதையும் சாதிக்கலாம், எப்படிப்பட்ட புத்தாசாலித்தனமான அரசு அமைப்பின் கண்களிலும் விரலைவிட்டு ஆட்டலாம் என்ற தமிழ் சினிமாவின் ஃபார்முலாதான் இதிலும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், விஜய் எனும் பெரிய நட்சத்திர அந்தஸ்து கைகொடுத்திருக்கிறது. இவருக்கு ஏற்ற தருணங்களை ஆங்காங்கே சொருகியிருக்கிறார்கள். மனைவிக்குப் பயந்து செய்யும் சுட்டி, சண்டையில் மாஸ், வசனங்களில் நக்கல் மற்றும் மிரட்டல் என ரசிகர்களைக் கவர்ந்துகொண்டே இருக்கிறார் விஜய்.

இவர்களுக்குத் துணையாக முன்னணி நடிகை ஒரு பாடலுக்குக் குத்தாட்டம் போட்டது, இறுதியில் முன்னணி நடிகர் வந்து சிறிய உதவியைச் செய்வதும் அதற்காக வைக்கப்பட்ட வசனமும், , அஜித் பட இசையை பின்னணியில் ஒலிக்கவிட்டது, படையப்பா இசை, எம்எஸ் தோனியின் சிக்ஸர்களை துணைக்கு சேர்த்துக்கொண்டது என அவ்வப்போது தொய்வுகள் ஏற்படாதவாறு பாரத்துக்கொண்டார் வெங்கட் பிரபு.

இவை தவிர, விஜய்காந்துக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்கள். யாரும் எதிர்பார்க்காத ஓர் இடத்தில் வருகிறார் அவர். ஆனால், இது ஏமாற்றமளிக்கக்கூடிய வகையில்தான் வந்துள்ளது. விஜய்காந்த் வருகிறார் என்றால் முதலில் ஏன் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழும். இதற்கு வலுவான பதில் இல்லை. குறைந்தபட்சம் காரணத்தில் ஏதேனும் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கலாம். 1970-களில் பயன்படுத்தப்பட்ட ஒரு யுத்தியைக் கையாள்வதற்காக அவர் வருகிறார் என்பது ஏமாற்றமளித்தது.

படத்தில் விஜய் இருவேறு தோற்றங்களில் நடித்துள்ளார் என்பது தெரியும். இதில் இளவயது விஜய் கதாபாத்திரத்துக்கு வயதைக் குறைத்துக் காண்பிக்க டி ஏஜிங் (De-Aging) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தத் தொழில்நுட்பம் படத்தில் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் பெரிய பலமே இதுதான். விஜயும் இரு கதாபாத்திரங்களுக்கு வேறுபாடு காட்டி, சற்று தூக்கி நிறுத்தியிருக்கிறார். விஜயைப் பார்ப்பதில் ஒரு புதுமை இருந்தது.

ஜெயராம், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரை மீண்டும் திரையில் ஒன்றாகப் பார்க்க நன்றாக இருக்கிறது.

அதேசமயம், மற்ற கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு மெனக்கெட்டிரு்க்கலாம் என்ற எண்ணம் எழுகிறது. நிறைய சண்டைக் காட்சிகளில் கிராஃபிக்ஸ் சரியாக இல்லை. வீட்டில் வீடியோ கேம் விளையாடுவதைப் போன்ற உணர்வு வந்தது. விஜயகாந்த் மற்றும் பதின்பருவ விஜய் காட்சியிலும் இதே பிரச்னைதான்.

பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா அதிரவைக்கிறார். பில்லா, மங்காத்தா அளவுக்கு அசரவைக்கவில்லை என்றாலும் சமகாலத்துக்கு ஏற்ப இசையின் சப்தத்தை உயர்த்தி படத்திலிருந்து கவனம் விலகாமல் பார்த்துக்கொண்டார். படத்தின் நீளத்தைப் பொறுத்தவரை குறைப்பதற்கான இடங்கள் நிறைய உள்ளன. நிச்சயமாக, குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில் முழுக்க முழுக்க ஒரு விஜய் படமாக, விஜயைக் கொண்டாடுவதற்காக, திரையரங்குகளில் விசில்கள் பறப்பதற்கான தருணங்களுடன் எடுக்கப்பட்ட ஒரு வழக்கமான கமெர்ஷியல் படம்தான் தி கோட். ஸ்பை வகையறா கதை, தொழில்நுட்பப் படம் போன்ற விளம்பரங்களை மறந்துவிடுங்கள். லாஜிக் பார்க்காதீர்கள். பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ் அப், இன்ஸ்டா ஸ்பாலியர்களுக்கு பலியாகாமல் (வாய்ப்பில்லை என்றாலும்) கொண்டாட்ட மனநிலையில் நேராக தியேட்டருக்குச் செல்லுங்கள். கேள்விகளைக் கேட்காமல் மூளையைக் கழற்றி வையுங்கள். மூன்று மணி நேர திரையரங்கு அனுபவம் உங்களுக்கானது.