ANI
ANI
சினிமா

கோட் படத்தில் ஏஐ மூலம் விஜயகாந்த்?: பிரேமலதா விளக்கம்

யோகேஷ் குமார்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் படத்தில் ஏஐ மூலம் விஜயகாந்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கோட் (தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் செப்டம்பர் 5-ல் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கோட் படத்தில் ஏஐ மூலம் விஜயகாந்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சமீபத்தில் கலாட்டா யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: “வெங்கட் பிரபு ஐந்து அல்லது ஆறு முறை எங்கள் வீட்டுக்கு வந்து இதுகுறித்து பேசினார். அதற்கு முன்பு என் மகன் சண்முக பாண்டியனிடமும் இது குறித்து அவர் பேசியிருந்தார். பிரசாரத்திற்காக நான் சென்னை சென்றிருந்தபோது, என்னை நேரில் சந்தித்த வெங்கட் பிரபு, கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை ஒரு காட்சியில் நாங்கள் கொண்டு வர இருக்கிறோம். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார்.

விஜய்யும் தேர்தலுக்குப் பிறகு என்னை சந்திப்பதாக கூறியிருந்தார். இன்று விஜயகாந்த் இல்லாத நேரத்தில் அவருடைய இடத்தில் இருந்துதான் நான் யோசிக்க வேண்டும். அவர் இருந்திருந்தால் அவர் கண்டிப்பாக விஜயிடம் முடியாது என சொல்லியிருக்கமாட்டார். ஏனென்றால், விஜய்யை கேப்டன் அறிமுகப்படுத்தியது உலகத்துக்கே தெரியும். இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மீதும், விஜய் மீதும் அவருக்கு எப்போதும் அதிகமான பாசம் உண்டு.

எனவே, விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக மறுப்பு தெரிவித்திருக்க மாட்டார். விஜய் என்னை வந்து சந்திக்கும்போது நல்ல முடிவை சொல்லுவேன். உங்களிடமும், விஜயிடமும் என்னால் ‘இல்லை’ என சொல்ல முடியாது என்று வெங்கட் பிரபுவிடம் கூறினேன்” என்றார்.