விஜய் எங்கள் குடும்பத்தில் ஒருத்தர் என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய தி கோட் படம் செப். 5 அன்று வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் இதுவரை உலகளவில் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் உருவத் தோற்றம் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் தேனியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ‘கோட்’ படத்தை பார்த்தனர். இவர்களுடன் இணைந்து சரத் குமார் மற்றும் இயக்குநர் பொன்ராம் ஆகியோரும் படத்தை பார்த்தனர்.
இந்நிலையில் கோட் படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், “கோட் படத்தில் என் தந்தை தோன்றிய ஒவ்வொரு நொடியையும் மிகவும் பிரமிப்புடன் பார்த்தேன், ஏஐ மூலம் அவரை காட்சிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். படம் வெளியாகி ஒரு வாரம் ஆனாலும் ரசிகர்கள் படத்தை திரையரங்குகளில் கொண்டாடுகிறார்கள். விஜய் எங்கள் குடும்பத்தில் ஒருத்தர். வெங்கட் பிரபுவும் அப்படித்தான். தந்தைக்கு மரியாதை அளிக்கும் வகையில் இவ்வாறு செய்ததில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.