விஜய் ஆண்டனி 
சினிமா

செருப்பு அணியாமல் நடந்து பாருங்கள்..: விஜய் ஆண்டனியின் கருத்துக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு

“செருப்பின்றி வெளியே நடப்பதால் கால் பாதம் வழியாக நுண் புழுக்கள் உள் சென்று குடலில் வாழும்”.

யோகேஷ் குமார்

செருப்பு அணியாமல் நடந்து பாருங்கள் என்று விஜய் ஆண்டனி சொன்ன கருத்துக்கு மருத்துவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், மழை பிடிக்காத மனிதன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு செருப்பு அணியாமல் வந்தார் விஜய் ஆண்டனி.

முன்னதாக, ஒரு நேர்காணலில், “செருப்பு அணியாமல் நடந்து பாருங்கள், அதன் அருமை உங்களுக்கு புரியும். உண்மையாக சொல்கிறேன், 1 மாதம் செருப்பு போடாமல் நடந்து பாருங்கள். அது ஒரு மாற்றத்தை எற்படுத்தும்” என்றார்.

இந்நிலையில் இந்த கருத்துக்கு மருத்துவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா, “செருப்பின்றி வெளியே நடப்பதால் கால் பாதம் வழியாக நுண் புழுக்கள் உள் சென்று குடலில் வாழும். குடலில் இருந்து கொண்டு ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும். இதன் விளைவாக ரத்த சோகை நோய் குணமாக வழியே இராது. இன்னும் செருப்பின்றி வெளியே பணி புரிபவர்கள், நடப்பவர்களுக்கு காலில் முள் தைத்து அல்லது ஆணி தைத்து அதனால் பல சிக்கல்கள் உண்டாகின்றன. எனவே, செருப்பு உள்ளிட்ட காலணிகளை அணிந்து வெளியே நடப்பது பல பிரச்சனைகளைத் தடுக்கும். பல நோய்களில் இருந்து காக்கும் நடவடிக்கையாகும்” என்றார்.

மேலும், மூளை, முதுகு தண்டு, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ப்ரூனோ, “ஒருமுறை குடலினுள் சென்ற குடற்புழுக்கள் 15 வருடங்கள் வரை உள்ளிருந்து உங்கள் இரத்தைத்தை உறிஞ்சுகின்றன. காலரா, டைபபயிடு எல்லாம் சில நாட்களே, வருடக்கணக்கில் அல்ல என்பதையும் நினைவில் வையுங்கள். காலரா டைப்பாயிடு ஆகியவற்றை தடுக்க நீரை காய்ச்சி குடித்தால் போதும், ஆனால் இரத்தச்சோகையை தடுக்க நீரை காய்ச்சி குடித்தால் மட்டும் போதாது. உங்கள் காலில் இந்த புழுக்களின் சிறுவடிவம் (இளம் புழு, லார்வா) தொற்றுவதை தவிர்க்கவேண்டும். எப்படி தவிர்க்க முடியும்? சிம்பிள் செருப்பு அணியுங்கள். பள்ளி சிறுவர்களுக்கு காலணி வழங்கிய பிறகு இரத்தச்சோகை பாதிப்பு குறைந்தது. பேறுகால மரணங்களை குறைத்ததில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா காலணியும் பங்கு வகிக்கிறது என்பது உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். ஆனால் அது தான் அறிவியல்” என்றார்.