தயாரிப்பாளர் கே. ராஜன் உயிரிழந்தார் 
சினிமா

தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாற்றில் குதித்து தற்கொலை: திரைத்துறையினர் அஞ்சலி | K Rajan |

அவர் சில தனிப்பட்ட மற்றும் பொருளாதார பிரச்னைகளால் மனவருத்தத்தில் இருந்ததாகத் தெரிய வருகிறது.

கிழக்கு நியூஸ்

தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரும் இயக்குநருமான கே. ராஜன் (85), சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தன்னை மாய்த்துக்கொண்ட சம்பவம் தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கே. ராஜன், 1983-ல் வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். கணேஷ் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் பல படங்களைத் தயாரித்தார். 1991-ல் வெளியான ‘நம்ம ஊரு மாரியம்மா’ படத்தை இயக்கியிருந்தார். சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். திரையுலகில் நிலவும் பொருளாதார சிக்கல்கள், தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நஷ்டங்கள், நடிகர்களின் அதிகப்படியான சம்பளம் உள்ளிட்ட விவகாரங்களைப் பொதுவெளியில் வெளிப்படையாகப் பேசி வந்தார். பல பட விழாக்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அவரது பேச்சுகள் தொடர்ந்து கவனம் பெற்றிருந்தன. அவரது மகன் கே.ஆர். பிரபு, நடிகராக அறிமுகமாகி பின்னர் 2019-ல் வெளியான எல்.கே.ஜி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

கடந்த மே 17 அன்று காலை வண்ணாரப்பேட்டை பகுதியில் இருந்து தனது கார் ஓட்டுநருடன் கிளம்பிய கே. ராஜன், அடையாறு ஆற்றங்கரை அருகே சென்றபோது காரை நிறுத்துமாறு கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் சிறிது நேரம் நடைபயிற்சி செய்வதாகக் கூறிவிட்டு சென்ற அவர், பாலத்திலிருந்து ஆற்றில் குதித்ததாகக் கூறப்படுகிறது. அடையாறு ஆற்றில் ஒருவர் குதித்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். அதன் பின்னரே உயிரிழந்தவர் கே. ராஜன் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பகட்ட தகவல்களின் படி, அவர் சில தனிப்பட்ட மற்றும் பொருளாதார பிரச்னைகளால் மனவருத்தத்தில் இருந்ததாகத் தெரிய வருகிறது. அவரது மறைவுக்குத் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Veteran Tamil producer-director K. Rajan, 85, died after jumping into Chennai’s Adyar River. Police are probing personal and financial issues.