சினிமா

சரோஜா தேவி காலமானார்!

மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ராம் அப்பண்ணசாமி

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலமானார்.

கடந்த 1938 அன்று மைசூரூ சமஸ்தானத்தின் பெங்களூருவில் பிறந்த சரோஜா தேவி, 'மகாகவி காளிதாஸா' என்ற கன்னடப் படத்தின் மூலம் 1955-ல் திரையுலகில் அறிமுகமானார். இதற்கு அடுத்த ஆண்டு வெளியான `திருமணம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அவர் அறிமுகமானதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு ஓரிரு தமிழ் படங்களில் சரோஜா தேவி நடித்திருந்தாலும், 1958-ல் வெளியான எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடத்திருந்த `நாடோடி மன்னன்’ படத்தில் அவர் ஏற்றிருந்த `ரத்னா’ கதாபாத்திரம், தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் அவரை கொண்டு சேர்த்தது.

இதைத் தொடர்ந்து சபாஷ் மீனா, செங்கோட்டை சிங்கம், தேடி வந்த செல்வம், இல்லறமே நல்லறம் என சரோஜா தேவி நடித்திருந்த 4 தமிழ் படங்களில் அதே ஆண்டில் வெளியாகின.

தாய் சொல்லைத் தட்டாதே, தெய்வத் தாய், படகோட்டி, நான் ஆணையிட்டால், பெற்றால்தான் பிள்ளையா, அரச கட்டளை, பெரிய இடத்துப் பெண், என் கடமை, எங்கள் வீட்டுப் பிள்ளை, அன்பே வா என எம்.ஜி.ஆருடன் இணைந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

அதேபோல தங்கமலை ரகசியம், சபாஷ் மீனா, பாகப் பிரிவினை, இரும்புத் திரை, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், ஆலயமணி, புதிய பறவை என சிவாஜி கணேசனுடனும் இணைந்து பல வெற்றிப் படங்களில் அவர் நடித்துள்ளார்.

தமிழுடன், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரோஜா தேவி, கன்னட திரையுலகில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற முதல் நடிகை ஆக அறியப்படுகிறார்.

இந்திய திரையுலகில் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்ம ஸ்ரீ (1969), பத்ம பூஷண் (1992) ஆகிய விருதுகளை மத்திய அரசு அவருக்கு வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, கர்நாடக மற்றும் ஆந்திர அரசுகளின் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் ஆகியவையும் அவருக்கு அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளது.

87 வயதான சரோஜா தேவி மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 14) காலை அவர் காலமானார்.

சரோஜா தேவியின் மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், இந்திய திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.