விக்ரமின் வீர தீர சூரன் பாகம் 2 படத்தை வெளியிட தில்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்மூலம், இப்படம் இன்று மாலை திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம், எஸ்ஜே சூர்யா நடிப்பில் எஸ்யூ அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வீர தீர சூரன். இப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகவிருந்த நிலையில், பட வெளியீட்டுக்குத் தடைகோரி படத்துக்கு நிதியுதவி செய்த பி4யூ நிறுவனம் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
பி4யூ நிறுவனம் இப்படத்தில் முதலீடு செய்துள்ள நிலையில், போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி ஓடிடி உரிமம் மூலம் வரும் தொகை பி4யூ நிறுவனத்துக்குச் சொந்தமானது. ஆனால், ஓடிடி உரிமம் விற்கப்படுவதற்கு முன்பு படத் தயாரிப்பு நிறுவனமான ஹெச்ஆர் பிக்சர்ஸ் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது. பட வெளியீட்டுத் தேதியை அறிவித்ததால், படத்தை ஓடிடியில் விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது பி4யூ தரப்பு குற்றச்சாட்டு. மேலும், நஷ்டஈடு கோரியும் பி4யூ தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.
வீர தீர சூரன் பாகம்-2 வெளியீட்டுக் இடைக்காலத் தடை விதித்து தில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதனால், இன்று காலை வெளியாகவிருந்த வீர தீர சூரன் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்தது. தமிழ்நாட்டில் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. வெளிநாடுகளிலும் படம் வெளியாகாமல் இருந்தது.
இன்று காலை வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், படத் தயாரிப்பு நிறுவனம் ரூ. 7 கோடியை வைப்புத் தொகையாகச் செலுத்த உத்தரவிட்டது. மேலும், 48 மணி நேரத்துக்குள் அனைத்து ஆவணங்களையும் உடனடியாகத் தாக்கல் செய்யவும் தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் விக்ரம், எஸ்ஜே சூர்யா மற்றும் இயக்குனர் அருண் குமார் ஆகியோர் தயாரிப்பாளருக்கு உதவ முன் வருவதாகவும் கூறப்பட்டது. இதனால், படம் பிற்பகலுக்குப் பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இருந்தபோதிலும், வீர தீர சூரன் பாகம் -2 படத்தை வெளியிட 4 வாரங்களுக்குத் தடை விதித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், படம் வெளியாவது தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தில்லி உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இரு தரப்புக்கும் இடையே சுமூகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை தில்லி உயர் நீதிமன்றம் நீக்கியது. இரு தரப்பும் எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம், படம் இன்று மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.