தற்காலத் தமிழ்ப் பாடல்களில் தமிழும் கொஞ்சமாகப் பயன்படுத்தப்படுகிறது. இசை இப்போது ஓசை ஆகிவிட்டது என்று பாடலாசிரியர் வைரமுத்து விமர்சித்தார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாடலாசிரியர் வைரமுத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கரூர் சம்பவம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “அவர்கள் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருப்பதால் நானும் இந்தக் கேள்வியைக் கடந்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “பிறமொழிப் பாடல்களில் தமிழும் கொஞ்சம் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் உண்மை. இன்று ஆங்கிலத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் ஓசைகளுக்கும் மத்தியில் தமிழ் கொஞ்சமாகப் பயன்படுத்தப்படுகிறது. இசை இப்போது ஓசை ஆகிவிட்டது. இது மிகப்பெரியதொரு விபத்து. அதனால் மொழி என்பது ஒலி ஆகிவிட்டது. இவையிரண்டும் மீறி வர வேண்டும். மாறி வர வேண்டும்.
இப்போது 25 ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள் மறுவெளியீடு காண்கின்றன. குஷி, ரிதம், மனிதன் போன்ற படங்கள் மறுபடியும் வெளியாகின்றன. ரிதம் - ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து. குஷி - தேவா, வைரமுத்து. மனிதன் - சந்திரபோஸ், வைரமுத்து. இவை மறு வெளியீடு காண்பதற்கு நடிகர்கள் மட்டும் காரணம் அல்ல. பாடல்களும் காரணம். நல்ல பாடல்கள் ஒரு படத்தைத் துருப்பிடிக்க விடாமலும், பழைய பாசி படிந்துவிடாமலும் பார்த்துக் கொள்கின்றன. நல்ல பாடல்கள் வேண்டுமென்றால் பழைய படங்களைத் தேடுகிறார்கள். அந்த நிலைமை மாறும்.
இன்றைய படங்களில் குடும்பம் இல்லை. காதல் இல்லை. இவையில்லாமல் நல்ல பாடல்கள் கிடையாது. கதைகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அதனால் படத்தில் கதைச்சத்து இருக்காது. சூழல் இருக்காது. சூழல்கள் இல்லையென்றால் பாடலாசிரியனுக்கு வேலை இல்லை. இசையமைப்பாளரும் இயக்குநருமே பாடல்களை எழுதி நிரப்பிவிடுகிறார்கள். நல்ல படம், நல்ல கதை, நல்ல சூழல், பெண்களுக்கு முக்கியத்துவமுள்ள படங்கள் வந்தால் நல்ல பாடல்கள் பிறந்து அரசாளும்.
கல்லூரிகளில் மாணவ மாணவியரும் பள்ளிகளில் மாணவர்களும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்ற கொடுஞ் செய்தி நம் சமூகத்தையே பாதிக்கிறது. ”ஒரு பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை. நாம் பண்போடு வாழ்ந்திருந்தால் கேள்விகள் இல்லை” என்று நான் ஒரு பாட்டு எழுதியிருக்கிறேன். அதை அடிக்கடி போட்டுக் கேளுங்கள். அது போதைக்கு எதிரான பண்பாடு” என்றார்.