வைரமுத்து  
சினிமா

எழுத்தாளர்களுக்கும் உரிமைத் தொகை: கவிஞர் வைரமுத்து கோரிக்கை

யோகேஷ் குமார்

தமிழ்நாட்டுத் தாய்மார்களுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகைக்கு நிகராகவேனும் எழுத்தாளர்களுக்கு உரிமத் தொகை வழங்கப்பட வேண்டும் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் எனக் கூறி வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியதாவது: “ஓர் இலக்கியக் கவலையை

இவ்விடத்தில் சுட்டுரைக்கிறேன்

தமிழ்நாட்டுச் சூழலில்

இலக்கியத்தின் உடல்நிலை

ஆரோக்கியமாக இல்லை

அரசியலின்

பேரோசைகளுக்கும்

ஆன்மிகத்தின்

வாத்தியங்களுக்கும் மத்தியில்

இலக்கியத்தின் புல்லாங்குழல்

எடுபடவில்லை

இலக்கியவாதிகளுக்கு ஏற்புடைய

ஊடகங்களும் இல்லை

சிற்றிதழ்கள்

குறைந்தும் மறைந்தும்

இறந்தும் போயின

வணிகப் பத்திரிகைகளின்

இலக்கிய வெளி

இருளேறிக் கிடக்கிறது

சமூக ஊடகங்களின் எதிராடல்

கூட்டாண்மை நிறுவனங்களின்

கலாசாரச் சூறையாடல்

உள்ளூர்ப் பண்பாடுகளின்

உயிர்த் தேய்ப்பு

இவற்றை

எதிர்த்தாட இயலவில்லை

இளைத்த குரல்கொண்ட

எழுத்தாளர்களால்

காகிதச் சந்தைக்கும்

வாசகனுக்கும்

கட்டுபடி ஆகவில்லை

பதிப்பாளனுக்கும்

எழுத்தாளனுக்கும்

இருந்த கணக்குவழக்கு

இப்போது வழக்காக மட்டுமே

உண்மையின்

தீவிர எழுத்துக்காரன்

உயிர்ச்சேதம் சந்திக்கிறான்

இலக்கியப் பரிசுகள்

இரங்கல் கூட்டத்தில்

வழங்கப்படுகின்றன

துய்ப்புக் கலாசாரப் பட்டியலில்

இறுதியில் இருந்து

இப்போது இல்லாமல்

போய்விட்டது புத்தகம்

சிறந்த எழுத்தாளர்களின்

செவ்விலக்கியப் படைப்புத்திறன்

சினிமாவின் வர்த்தகப் பற்களில் அரைபட்டுவிட்டது

காதல் தோல்விக்கு முன்பே

தோல்வியுறுவது

கவிதைத் தொகுப்புதான்

இதை மீட்க வேண்டும்

பெருந்தொகை ஒதுக்கி

அரசு நூலகங்கள்

புத்தகங்கள் கொள்முதல்

செய்ய வேண்டும்

தமிழ்நாட்டுத்

தாய்மார்களுக்கு வழங்கப்படும்

உரிமைத் தொகைக்கு

நிகராகவேனும்

எழுத்தாளர்களுக்கு

உரிமத் தொகை

வழங்கப்பட வேண்டும்

எழுத்து வாசிப்பு பேச்சு

மூன்றும்

பள்ளிகளில் மறுமலர்ச்சி

காணவேண்டும்

வாரா வாரம்

இலக்கிய விழாக்கள்

ஆரவாரம் செய்யவேண்டும்

இலக்கியத்துக்கான இடத்தை

ஊடகங்கள் ஒதுக்க வேண்டும்

இலக்கியம் என்பது

ஒரு நாட்டின்

மொழி வளம் அல்ல;

மனித வளம்”

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.