வெளிப்படையான வகையில் ஆபாசமான பாலியல் காட்சிகளை உள்ளடக்கிய காணொளிகளை வெளியிட்ட காரணத்தால் ULLU, ALTT, Desiflix, Big Shots உள்ளிட்ட 25 பிரபலமான இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு மத்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது.
`மென்மையான ஆபாசம்’ என்று விவரிக்கப்படும் ஆபாசக் காட்சிகள் உள்ளடக்கிய காணொளிகளை இந்த தளங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும், இத்தகைய செயல் நாட்டின் ஐடி விதிகள் மற்றும் ஏற்கனவே உள்ள ஆபாசத்திற்கு எதிராக சட்டங்களை மீறியுள்ளது என்றும், அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தகவல் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
`காம வலைத் தொடர்கள்’ என்ற போர்வையில், போதுமான கட்டுப்பாடுகள் இல்லாமல், ஆபாசக் காட்சிகளை உள்ளடக்கிய காணொளிகளை இந்த செயலிகள் மற்றும் இணையதளங்கள் பரப்புவதாக அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மிகவும் குறிப்பாக, சிறார்களுக்கு ஆபாச காணொளிகள் எளிதில் கிடைப்பதைத் தடுக்கும் வகையிலும், மின்னணு வெளியீடுகள் ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் வரம்புக்குள் இருப்பதை உறுதி செய்யும் வகையிலும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சட்ட விவகாரங்கள் துறை, இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு போன்ற தொழில் அமைப்புகள் மற்றும் பெண்கள் உரிமைகள் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்காக செயல்படும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
`தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் ஐடி விதிகள், 2021-ன் கீழ் சம்பந்தப்பட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகள் முடக்கப்படுவதை உறுதிசெய்ய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன’ என மத்திய அரசாங்கம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.