தயாரிப்பாளர் சிவா 
சினிமா

விமர்சனங்களை விமர்சித்த பிரபல தயாரிப்பாளர்: சரியா? தவறா?

"படங்களை விமர்சிப்பவர்கள் திரையரங்குகளுக்கே வரவேண்டாம் எனத் தரம் தாழ்த்தி பேசாமல், பொறுப்புணர்ந்து பேச வேண்டும்".

யோகேஷ் குமார்

தமிழ்ப் படங்களின் வசூல் மிகவும் மோசமாக உள்ளதால் விமர்சகர்கள் கவனமாக விமர்சனத்தை எழுதவேண்டும் என்று தயாரிப்பாளர் டி. சிவா கூறியுள்ளார். இதையடுத்து அவருடைய பேச்சு சரியா தவறா என்கிற விவாதம் எழுந்துள்ளது.

படவிழாவில் டி. சிவா பேசியதாவது

“தமிழ்ப் படங்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. முன்பு, ஒரு படம் ரூ. 20 கோடி வசூல் செய்தால், அப்படம் டிஜிட்டலையும் அதே தொகைக்கு விற்கப்படும்.

ஆனால் தற்போது ஒரு படம் ரூ. 20 கோடி வசூல் செய்தால், அப்படம் டிஜிட்டலில் ரூ. 3 கோடிக்கே விற்கப்படுகிறது.

இந்த வியாபாரம் எப்படி நடக்கிறது என்பதை கற்பனை செய்ய முடியவில்லை.

தெலுங்கில் ஒரு சின்ன படம் வெற்றி பெற்றால் ரூ. 60 கோடி பங்கு என்கிறார்கள், பெரிய படம் என்றால் ரூ. 200 கோடி, 300 கோடி, 600 கோடி என்கிறார்கள். தமிழ்நாட்டில் இதெல்லாம் சாத்தியமில்லை.

கருடன், மகாராஜா போன்ற படங்கள் நல்ல வசூல் செய்ததாக பேசுகிறோம். இப்படங்கள் எல்லாம் அதைவிட இரு மடங்கு அதிகமாக வசூல் செய்திருக்க வேண்டும்.

தமிழ் சினிமா தனது ரசிகர்களை இழந்துவிட்டது.

படங்களை விமர்சிப்பவர்கள் திரையரங்குகளுக்கே வரவேண்டாம் எனத் தரம் தாழ்த்தி பேசாமல், பொறுப்புணர்ந்து பேச வேண்டும். விமர்சனம் என்ற பெயரில் ஒரு படத்தை கொலை செய்யாதீர்கள்.

திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஒரு படம் வெற்றி பெற தயாரிப்பாளரே முக்கியமான காரணம். ஒரு படம் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர் மட்டும் வெற்றி பெற்றதாக அர்த்தம் இல்லை, ஒட்டுமொத்த படக்குழுவினரும் வெற்றி பெறுவார்கள். ஒரு வெற்றி படத்தை கூட விற்க முடியவில்லை.

அனைத்து படங்களும் வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை. அனைத்து படங்களிலும் ஏதேனும் குறை இருக்கும். ஒவ்வொரு படங்களையும் தவறாக பேசி அதனை கொலை செய்து கடைசியில் சுடுகாட்டில் நிற்கப்போகிறார்கள்.

எனவே படத்தை விமர்சனம் செய்பவர்கள் இனி பொறுப்புணர்ந்து பேசுங்கள்” என்றார்.

டி. சிவாவின் பேச்சு நிஜமாகவே மதிக்கத்தக்கதா, விமர்சகர்களால் தான் படங்கள் தோல்வியடைகிறதா என்கிற விவாதத்தை அவருடைய பேச்சு உருவாக்கியுள்ளது.

உண்மையில் நல்ல படங்களை மக்கள் ரசிப்பது இல்லையா?

இந்த வருடத்தில் கடந்த ஆறு மாதங்களில் மஞ்ஞும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆவேஷம், கோட் லைஃப் போன்ற மலையாளப் படங்கள் தமிழ்நாட்டிலேயே நல்ல வசூலைப் பெற்றுள்ளன. அரண்மனை 4 படத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளுக்கு அதிக வசூலை அளித்தது மஞ்னும்மல் பாய்ஸ் படம் தான்.

இந்த வருடம் தமிழில் கேப்டன் மில்லர், மகாராஜா, அரண்மனை - 4 ஆகிய படங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகத் தகவல்கள் வெளியாகின. அரண்மனை 4 படம் ரூ. 100 கோடி வசூலை அதிகாரபூர்வமாகவே அறிவித்தது.

ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்த லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. அதேபோலவே சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படமும். விஜய், அஜித், கமல் போன்ற பிரபல நடிகர்களின் படங்கள் இந்த வருடத்தில் இதுவரை வெளியாகவில்லை.

ஒரு படத்தில் கதை இருந்தால், அல்லது ரசிகர்களை ஈர்க்கும் ஏதேனும் ஒரு விஷயம் இருந்தால் நிச்சயம் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு செல்வார்கள் என்பதற்கு சிறிய மலையாளப் படமான மஞ்ஞும்மல் பாய்ஸ் படம் ஒரு சிறந்த உதாரணம். அதிலும் படத்தின் கடைசிக்காட்சியில் கண்மணி அன்போடு காதலன் பாடல் ஒலித்தபோது அத்தருணத்தில் உணர்ச்சிவசப்படாத தமிழ் ரசிகரே இருக்க முடியாது. இதுபோன்ற தருணங்களைத் தமிழ் இயக்குநர்களால் ஏன் உருவாக்க முடிவதில்லை என்கிற கேள்வியைத்தான் டி. சிவா கேட்டிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக விமர்சனங்களால் தான் படத்தின் வசூல் பாதிக்கப்படுவதாக அவர் பேசியுள்ளார்.

ஹிந்தியிலும் மலையாளத்திலும் வித்தியாசமான கதைக்கருவுடன் படங்கள் வெளிவரும்போது தமிழில் அதுபோன்ற முய்ற்சிகள் குறைவாக உள்ளன? திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான படங்களைக் காண நேர்வதால் தான் திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பது சராசரி தமிழ் ரசிகனுக்கு அலுப்பாகத் தோன்றுகிறது. அரண்மனை 4 படம் எப்படி ரசிகர்களைச் சரியாகச் சென்றடைந்தது? சுந்தர் சி-யால் மட்டும் எப்படி ரசிகர்களைத் திருப்திப்படுத்த முடிந்தது? அந்தப் படத்துக்கு எல்லா விமர்சகர்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் இட்டதால் தான் படம் வெற்றி பெற்றதா? கதையிலும் திரைக்கதையிலும் தமிழ் இயக்குநர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று டி. சிவா பேசியிருந்தால் அது தமிழ்த் திரையுலகின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்திருக்கும். அதைவிட்டு விட்டு விமர்சகர்கள் மீது அவர் பாய்ந்தது ஏன்? பழி ஓரிடம், பாவம் ஓரிடமா? பக்கத்துக்கு மாநில மொழிப் படங்கள் இந்திய அளவில் வசூலை ஈட்டுகிற முடிகிறபோது ஏன் எந்த ஒரு தமிழ்ப் படத்தாலும் பான் இந்தியா அளவில் வசூலை ஈட்ட முடியவில்லை? இதற்கும் விமர்சனங்கள் தான் காரணமா?

பிரச்னை விமர்சனங்கள் மீதல்ல, தங்கள் மீது தான் என்கிற உண்மையை எப்போது தமிழ்த் திரையுலகம் அறிந்துகொள்ளப் போகிறது? டி. சிவா தன் பார்வையை மாற்றிக் கொள்வாரா?