‘துள்ளுவதோ இளமை’ அபிநய் காலமானார் 
சினிமா

‘துள்ளுவதோ இளமை’ அபிநய் காலமானார் | Abinay |

கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அபிநய் அதிகாலையில் காலமானார்...

கிழக்கு நியூஸ்

துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த அபிநய் உடல் நலக் குறைவு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 44.

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் கடந்த 2002-ல் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தவர் அபிநய். இவரது முழுப்பெயர் அபிநய் கிங்கர். அதன்பின் சிங்கார சென்னை, ஜங்ஷன் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் அவருக்குப் பெரிதளவில் வெற்றியைத் தேடித் தரவில்லை.

அதைத் தொடர்ந்து என்றென்றும் புன்னகை, ஆறுமுகம், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார். சில விளம்பரங்களிலும் நடித்து வந்த அபிநய், பின்னணிக் குரல் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். துப்பாக்கி, அஞ்சான் ஆகிய படங்களில் நடிகர் வித்யூத் ஜம்வாலுக்குக் குரல் கொடுத்துள்ளார். அதன்பின் திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நிலையில் சமீபத்தில் உடல் மெலிந்த நிலையில் காணப்பட்ட அவருக்குக் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து அவரது சிகிச்சைக்கு தனுஷ், கேபிஒய் பாலா உள்ளிட்டோர் உதவி வந்தனர். தொடர் சிகிச்சை பெற்று வந்த அபிநய், இன்று அதிகாலை 4 மணி அளவில் அவருடைய இல்லத்தில் காலமானார். அவருடைய மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Abhinay, who acted in the film Thulluvatho Ilamai, passed away due to health issues.