காலமானார் தர்மேந்திரா 
சினிமா

தர்மேந்திரா பற்றிய முக்கியமான 5 விஷயங்கள் | Dharmendra |

ஹிந்தி சினிமாவின் ஹீ-மேன் ஆகக் கொடி கட்டிப் பறந்தவர் தர்மேந்திரா.

கிழக்கு நியூஸ்

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த தர்மேந்திரா தனது 89 வயதில் நேற்று (நவம்பர் 24) காலமானார்.

அண்மைக் காலமாக மோசமான உடல்நிலை காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த நவம்பர் 12 அன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவர் வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நவம்பர் 24 அன்று அவருடைய உயிர் பிரிந்தது.

தர்மேந்திரா பற்றி அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

1. தலைமை ஆசிரியரின் மகன்

தர்மேந்திரா 1935-ல் பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தில் பிறந்தார் தர்மேந்திரா. இயற்பெயர் தரம் சிங் தியோல். இவருடைய தந்தை பள்ளியில் தலைமை ஆசிரியர். தலைமை ஆசிரியரின் மகன் என்றால் சொல்லவா வேண்டும். கண்டிப்புக்குப் பஞ்சம் இல்லாமல் வளர்ந்தார் தர்மேந்திரா. தந்தை படி படி என்றால், தர்மேந்திராவோ அதற்கு முற்றிலும் மாறாக சினிமா சினிமா என்றிருந்தார். ஹீரோவாகிவிட வேண்டும் என்பது தான் அவருடைய லட்சியம்.

இதற்குக் காரணம் 9-ம் வகுப்பு படிக்கும்போது அவர் பார்த்த முதல் படம். அந்தப் படத்தின் பெயர் ஷஹீத். இதைப் பார்த்தவுடன் யார் இவர்கள்? இத்தனை அழகான மனிதர்கள் எங்கு வாழ்கிறார்கள்? இந்தச் சொர்க்கம் எங்கு இருக்கிறது? என்ற எண்ணம் தர்மேந்திராவின் தூக்கத்தைத் தொலைத்துள்ளது.

எப்படியாவது சினிமாவுக்குள் நுழைந்துவிடலாம் என்று தர்மேந்திரா நினைத்தாலும், தலைமை ஆசிரியர் எளிதில் அனுமதித்துவிடுவாரா? சினிமா கனவைச் சொன்னவுடன் மொத்த குடும்பமும் எதிர்த்துள்ளது.

இந்தியாவில் எல்லா தலைமகன்களிடமும் சொல்லப்படும் அதே கதையைத் தான் தர்மேந்திராவின் தாயாரும் அவரிடம் கூறியுள்ளார். "மகனே, நீ மூத்த மகன். உனக்குக் குடும்பப் பொறுப்புகள் உள்ளன" என்று தர்மேந்திராவின் தாயார் சொல்ல, தர்மேந்திரா சற்று விரக்தியடைந்துவிட்டார்.

2. தர்மேந்திராவுக்கான கதவைத் திறந்த முதல் வாய்ப்பு

ஃபிலிம்ஃபேர் இதழின் ஆல் இந்தியா டேலன்ட் கான்டெஸ்டுக்கு விண்ணப்பம் கோரப்பட்டது. தர்மேந்திராவை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக அவருடைய தாயார் இதற்கு விண்ணப்பிக்கச் சொல்லியிருக்கிறார். தர்மேந்திராவின் வாழ்க்கையை மாற்றப்போவது இந்தப் போட்டி தான் என்பது அவருடைய தாயாருக்கு அப்போது தெரியாது.

இந்திய சினிமாவின் அடுத்த பெரிய நட்சத்திரத்தைக் கண்டறியும் வகையில் ஃபிலிம்ஃபேர் இப்போட்டியை 1960-ல் நடத்தியது. 1960-ல் ஃபிலிம்ஃபேர் தர்மேந்திராவும் விண்ணப்பிக்க, போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் வென்றுவிடுகிறார். தர்மேந்திராவே வெற்றியை எதிர்பார்க்கவில்லை.

போட்டியில் உள்ள சூட்சமமே, வெற்றியாளருக்கு ஹிந்தி சினிமாவில் ஒரு வாய்ப்பு என்பது தான். வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பு மட்டும் தர்மேந்திராவிடம் இருந்தது.

ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க, சிலர் மட்டுமே இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்கள். இவர்களில் 20 வயது தர்மேந்திராவும் ஒருவர். இறுதிச் சுற்றிலும் தர்மேந்திரா வென்றுவிடுகிறார். இந்த காரணமாகவே மும்பைக்கு இடம்பெயர்கிறார் தர்மேந்திரா.

வாய்ப்புகளுக்கான நகரமான மும்பை, தர்மேந்திராவுக்கு மட்டும் எளிதில் வாய்ப்பளித்துவிடவில்லை. பசியுடன், தூங்கா இரவுகளுடன், ஸ்டூடியோவுக்கு ஸ்டூடியோ கால்நெடுக நடைப்பயணத்துடன் மும்பை வாழ்க்கையைக் கழித்திருக்கிறார். சினிமா கனவு மட்டுமே மும்பையின் கடினமான நாள்களைக் கடக்க அவருக்குத் துணையாக இருந்துள்ளது.

ஒரு ஹீரோவுக்கு தேவையான எல்லா பொருத்தங்களும் இருந்தும், நிராகரிப்புகள் மட்டுமே பாலிவுட்டின் பதில்களாக இருந்தன. உதாரணத்துக்கு, லவ் இன் ஷிம்லா படத்துக்கு ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கச் சென்றார் தர்மேந்திரா. அவரைப் பார்த்த படக் குழுவினர் எங்களுக்கு ஹாக்கி வீரர் தேவையில்லை, ஹீரோ தான் தேவை என்று சொல்லியிருக்கிறார்.

3. பாலிவுட்டின் ஹீ-மேன்

ஒருவழியாக தில் பி தேரா, ஹம் பி தேரே படம் மூலம் பாலிவுட்டில் கால் பதித்தார் தர்மேந்திரா. முதல் படத்தில் அவருக்கு ஆரவார வரவேற்பு எதுவும் இல்லை. அவர் அடுத்து நடித்த ஷோலா ஆர் ஷப்னம் படம் வணிக ரீதியாக வெற்றி பெற, பாலிவுட்டை கட்டி ஆளத் தொடங்கினார் தர்மேந்திரா.

1966-ல் வெளியான ஃபூல் ஆர் படார் என்ற படத்தில் தான் முதன்முதலாக ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்தார். 1971-ல் வெளியான மேரா கௌன் மேரா தேஷ் என்ற படத்தின் மூலம், தான் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டார்.

இடையில், ஆயே மிலான் கி பேலா படத்தின் மூலம் நடிப்பிலும் தான் திறமையானவன் என்பதை அவர் நிரூபித்தார். அதேசமயம், 1975-ல் வெளியான சுப்கே சுப்கே படத்தின் மூலம் நகைச்சுவையிலும் ரசிகர்களை மகிழ்வித்தார்.

தொடர் வெற்றிகளுக்கு மகுடமாக 1975-ல் வெளியான ஷோலே படம் அமைந்தது. இன்றைக்கும் பல மாஸ் கமர்ஷியல் படங்களுக்கு ஷோலே ஒரு பாலபாடம்.

நல்ல உயரம், தோற்றம் அடுத்தடுத்த வெற்றிகள் எல்லாம் சேர்ந்து அவரை பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக மாற்றியது. ஹிந்தி சினிமாவின் ஹீ மேன் என்று அழைக்கப்படத் தொடங்கினார் தர்மேந்திரா.

4. தமிழ்நாட்டின் மருமகன்!

1948-ல் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் பிறந்து, பின்னாளில் ஹிந்தியில் மனம் கவர்ந்த நடிகையாக மாறியவர் ஹேமா மாலினி. இவரும் தர்மேந்திராவும் முதன்முதலில் சந்தித்தது 1965-ல். 1970-களில் காதல் மலர்ந்தது. சீதா ஆர் கீதா (Seeta Aur Geeta), ஷோலே, ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் இருவரும் ஒன்றாக நடித்துள்ளார்கள். இது படிப்படியாகக் காதல் மாறியது.

தர்மேந்திராவின் முதல் மனைவி பிரகாஷ் கௌர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌருக்கும் பிறந்தவர்கள் சன்னி தியோல், பாபி தியோல். இரு மகன்களும் தந்தை வழியில் பாலிவுட்டில் கால் பதித்தார்கள்.

திருமணம் முடிந்து இரு மகன்களைக் கொண்ட ஒருவர் மீண்டும் காதல் வலையில் விழுந்தது ஊடகங்களில் அப்போது பேசுபொருளானது. ஹேமா மாலினி குடும்பத்திலிருந்தும் எதிர்ப்புகள் வந்தன. எல்லாவற்றையும் கடந்து 1980-ல் தர்மேந்திராவும் ஹேமா மாலினியும் திருமணம் செய்துகொண்டார்கள். தர்மேந்திரா, ஹேமா மாலினிக்குப் பிறந்தவர் நடிகை எஷா தியோல். இவர், தமிழில் மணி ரத்னம் இயக்கத்தில் 2004-ல் வெளிவந்த ஆயுத எழுத்து படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

5. அரசியல் வாழ்க்கை

2004-ல் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார் தர்மேந்திரா. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தொடர்ச்சியாக இரு முறை வெற்றி பெற்ற பிகானெர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

எல்கே அத்வானி உள்பட பாஜகவின் முக்கியத் தலைவர்கள் தர்மேந்திராவுக்காகப் பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். சினிமா பலமும் அரசியல் பலமும் தர்மேந்திராவை மக்களவைக்கு அனுப்பி வைத்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆன பிறகு தர்மேந்திரா சந்தித்த விமர்சனங்கள் ஏராளம். பெரும்பாலும் நாடாளுமன்றம் செல்வதைத் தவிர்த்து வந்தார். கூட்டத்தொடர் நடக்கும் நேரங்களில் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருப்பார். இதுவே அவருக்குப் பல்வேறு விமர்சனங்களைச் சம்பாதித்துக் கொடுத்தது.

அரசியலுக்கு வந்ததை எண்ணி பின்னாளில் அவரே வருந்திப் பேசினார்.

Dharmendra | Hema Malini | Bobby Deol | Sunny Deol | Esha Deol | Bollywood |