சினிமா

தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி வழக்கு!

புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைணவத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளது.

யோகேஷ் குமார்

‘தங்கலான்’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 அன்று வெளியான படம் தங்கலான்.

ஒரு பக்கம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் நடிப்பும், ஜி.வி. பிரகாஷின் இசையும் படத்துக்கு பலமாக அமைந்தது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ‘தங்கலான்’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கக் கோரி திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும், வைணவத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும், இதனால் ஓடிடியில் வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.