தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிருந்துள்ளார் நடிகர் விக்ரம்.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - ஜி.வி. பிரகாஷ்.
இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தங்கலான் படம் மற்றும் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் பேசியுள்ளார் நடிகர் விக்ரம்.
விக்ரம் பேசியதாவது
“சேது, பிதாமகன், ஐ, அந்நியன் போன்ற படங்களில் கஷ்டப்பட்டு நடித்தேன். ஆனால், தங்கலாம் என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது. தங்கலான் கதாபாத்திரத்துக்கும் எனக்கும் நிறைய தொடர்பு உள்ளது. உன்னால் முடியாது என்று யார் சொன்னாலும், தனது இலக்கை நோக்கி செல்லும் ஒருவர் தான் தங்கலான்.
எனது வாழ்க்கையும் அதேபோல் தான் இருந்தது. சின்ன வயதிக் இருந்தே படிப்பின் மீது எனக்கு ஆர்வம் இல்லை. எப்படியாவது நடிகனாக வேண்டும் என்பதே இலக்காக இருந்தது.
மேடை நாடகங்களில் நடிக்கும் போதும் சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன். கல்லூரி காலத்தில் ஒரு நாடகத்தில் நடித்து சிறந்த நடிகன் விருதை வாங்கினேன். துரதிஷ்டவசமாக அன்று எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டு, கால் உடைந்தது.
அதைத் தொடர்ந்து 3 வருடங்களகாக மருத்துவமனையில் இருந்தேன். 23 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டேன். அதன் பிறகு நடைக்குச்சியை வைத்து தான் நடப்பேன்.
மருத்துவர்கள் எனது காலை அகற்றவேண்டும் என்றனர். ஆனாலும், எனது காலை காப்பாற்றிய மருத்துவர் என்னால் நடக்கவே முடியாது என்றார். ஆனால், என்னால் நடக்க முடியும், சினிமாவில் சாதிக்க முடியும் என்ற வெறி இருந்தது. பட வாய்ப்புகள் கிடைத்தும் 10 வருடங்கள் போராடினேன். அந்த நேரத்தில் நடைக்குச்சியுடன் வேலைக்கும் சென்றேன்.
எனது நண்பர்கள் என்னை பரிதாபமாக பார்த்தனர். ஆனால், அன்று நான் பின்வாங்கியிருந்தால் இன்று நான் இந்த நிலைமையில் இருந்திருக்க மாட்டேன்.
ஒருவேளை இப்பவும் வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால் தொடர்ந்து முயற்சி செய்திருப்பேன்.
நாம் ஒரு விஷயத்திற்கு ஆசைப்பட்டு கடுமையாக உழைத்தால் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும்” என்றார்.