சினிமா

இளையராஜாவுக்கு ஜூன் 2-ல் பாராட்டு விழா: முதல்வர் மு.க. ஸ்டாலின்

இளையராஜாவின் பிறந்தநாளன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

கிழக்கு நியூஸ்

சிம்பொனி அரங்கேற்றம் மற்றும் திரைத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் விதமாக இளையராஜாவுக்கு அரசு சார்பில் ஜூன் 2-ல் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா தனது முதல் மேற்கத்திய கிளாசிக்கல் சிம்பொனியை மார்ச் 8 அன்று லண்டனிலுள்ள அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்தார். சிம்பொனி அரங்கேற்றம் செய்வதற்காக லண்டன் புறப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பலர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள்.

லண்டனில் இளையராஜா அரங்கேற்றம் செய்த சிம்பொனிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பினரும் இளையராஜாவை விமான நிலையம் சென்று உற்சாகமாக வரவேற்றார்கள். சிம்பொனி இசை அரங்கேற்றத்தை 13 நாடுகளில் நடத்துவதற்கு நாட்கள் குறித்தாகிவிட்டது என்கிற மகிழ்ச்சியான தகவலையும் சென்னை திரும்பிய இளையராஜா தெரிவித்தார்.

சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு திரும்பிய இளையராஜா முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சென்று சந்தித்தார். தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். தொடர்ந்து, நாடாளுமன்றத்திலும் இளையராஜா கௌரவிக்கப்பட்டார்.

சிம்பொனி அரங்கேற்றத்துக்குப் பிறகு இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், இளையராஜாவுக்குப் பாராட்டு விழா நடத்தவிருப்பதாக அறிவித்தார்.

"லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!" என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் 13 அன்று அறிவித்தார்.

இந்நிலையில், சிம்பொனி அரங்கேற்றம் மற்றும் திரைத் துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடும் விதமாக ஜூன் 2 அன்று அவருடையப் பிறந்தநாளில் அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.