ஆஸ்கர் விருது போட்டிக்குள் நுழைந்தது தமிழ்ப் படம் ‘கெவி’ 
சினிமா

ஆஸ்கர் விருது போட்டிக்குள் நுழைந்தது தமிழ்ப் படம் ‘கெவி’ | Oscar Awards | Gevi |

காந்தாரா: சாப்டர் 1, ஹோம்பவுண்ட், தான்வி தி கிரேட் ஆகிய படங்களும் ஆஸ்கர் போட்டிக்குத் தகுதி...

கிழக்கு நியூஸ்

2026-க்கான 98-வது ஆஸ்கர் விருது போட்டிக்குத் தமிழ்ப் படமான கெவி நுழைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திரையுலகில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகளின் 98-வது விழா, இந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் நடைபெற உள்ளது. இந்த விருதுக்கான போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், தமிழிலிருந்து கெவி படம் ஆஸ்கர் விருது போட்டியில் இடம்பெறத் தகுதி பெற்றுள்ளது.

2024 வெளியான கெவி

அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் 2024 ஜூலை 18-ல் வெளியான படம் ‘கெவி’. இதில் அறிமுக நடிகர் ஆதவன் நாயகனாக நடித்திருந்தார். மேலும், ஷீலா, ஜாக்குலின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராசி தங்கதுரை வசனம் எழுதிய இந்தப் படத்துக்கு ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்திருந்தார். பாலசுப்பிரமணியன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

தமிழ் சர்வைவல் படம்

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் கடினமான இயற்கை சூழலை பின்னணியாகக் கொண்டு, கொடைக்கானல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழும் தம்பதியின் வாழ்க்கை, அவர்களின் போராட்டம் மற்றும் நீதிக்கான போராட்டத்தை இந்த படம் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தியது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் திரையரங்குகளில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

ஆஸ்கர் விருது போட்டிக்குத் தேர்வு

இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இடம்பெறத் தகுதி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்கான அகாடமி உறுப்பினர்கள் ஜனவரி 12 முதல் 16 வரை இறுதித் தேர்வுகளுக்காக வாக்குப்பதிவை மேற்கொள்ள உள்ளனர். அதிகாரப்பூர்வ இறுதிப் போட்டிக்கான பட்டியல் ஜனவரி 22 அன்று அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து கெவி படத்திற்குத் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

போட்டிக்குத் தகுதி பெற்ற படங்கள்

கெவி போலவே சிஸ்டர் மிட்நைட், மஹா அவ்தார் நரசிம்மா, காந்தாரா: சாப்டர் 1, ஹோம்பவுண்ட், தான்வி தி கிரேட் ஆகிய படங்களும் ஆஸ்கர் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இதில் ஹோம்பவுண்ட் படம் ஏற்கெனவே சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Gevi, directed by Tamizh Dhayalan and starring Aadhavan and Sheela, enters the Oscars 2026 race, joining Kantara: Chapter 1, Mahavatar Narsimha and Tanvi: The Great.