சினிமா

நேபாளத்தில் கலைப்படைப்பு தான் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது: பா. இரஞ்சித் | Pa Ranjith | Thandakaaranyam |

நாங்கள் வெறுமனே ஒரு பொருளை விற்க முயலவில்லை. எங்களுக்கு ஒரு பெரிய நோக்கம் உள்ளது.

கிழக்கு நியூஸ்

பா. இரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள தண்டகாரண்யம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஞாயிறன்று நடைபெற்றது. அதியன் ஆதிரை இயக்கிய இந்தப் படத்தில் தினேஷ், கலையரசன் நடித்துள்ளார்கள். இசை - ஜஸ்டின் பிரபாகரன்.

இந்த விழாவில் பா. இரஞ்சித் பேசியதாவது:

(தயாரிப்பாளர்கள்) சாய் தேவானந்த், சாய் வெங்கடேஷ்வரன் மற்றும் அவர்களுடைய குழுவினருக்கு என்னுடைய பெரிய நன்றி. இப்படி ஒரு படத்தை எடுப்பது எளிதல்ல. என்னுடன் இணைந்து படம் செய்ய வருபவர்கள் மிகக் குறைவு. தமிழ்த் திரையுலகில் தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் கூட என்னுடன் இணைந்து பணியாற்றுவது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே உள்ளார்கள்.

கடந்த 12 வருடங்களாக சிலருடன் மட்டுமே தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவர்கள் என்னை நம்புகிறவர்களாகவும், நான் நம்பும் அரசியலை நம்புபவர்களாகவும் இருக்கிறார்கள். அந்த வகையில், சாய் தேவானந்த் என்னுடைய படங்களைப் பார்த்து, என் தயாரிப்புப் படங்களைப் பார்த்து, என்னுடன் இணைந்து ஆர்வமாக வேலை செய்து வருகிறார். தண்டகாரண்யம் மற்றும் வேட்டுவம் படங்களின் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அவருக்கு இந்த நேரத்தில் பெரிய நன்றி தெரிவிக்கிறேன். அவர் வெறும் தயாரிப்பாளராக மட்டுமல்ல, என்னை நம்பும் ஒரு நல்ல நண்பனாகவும் இருக்கிறார். உண்மையில், இவ்வளவு பேர் என்னுடன் இணைந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

கடந்த 12-13 வருடங்களில் இவ்வளவு பேர் என்னுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் பார்த்து பேசிக்கொள்வது, அவர்களைப் பற்றி கருத்து தெரிவிப்பது, அவர்களுடைய வளர்ச்சியைப் பார்ப்பது உண்மையில் மகிழ்ச்சியாகவும், பெரிய உற்சாகமாகவும் இருக்கிறது. இது ஒரு குடும்ப விழா போல உள்ளது. நீலம் என்றால் இவ்வளவு பெரிய கூட்டம் வெளியில் இருந்து வருமா என்று தெரியாது, ஆனால் நமக்கு இவ்வளவு பெரிய பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இவ்வளவு பெரிய கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், இவ்வளவு பெரிய குழு இந்த 12-13 வருடங்களில் உருவாகியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தக் குழு தனித்தனியாக வளர்ந்து வருகிறது. இன்னும் ஒரு சில வருடங்களில் இந்தக் குழு தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று நம்புகிறேன். இவர்களில் பலர் பல்வேறு வகையில் வளர்ந்து, தமிழ்த் திரையுலகை ஆளும் கலைஞர்களாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் இருப்பார்கள் என்று பெரிய நம்பிக்கை உள்ளது. இவர்கள் வெறும் பணம் சம்பாதிக்க மட்டும் இல்லாமல், சமூகப் பார்வையுடன், தங்கள் கலையின் மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வர விரும்பும் மனிதர்களாக இருப்பார்கள். இது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது.

நான் தமிழ்த் திரையுலகில் வெறும் இயக்குநராக மட்டும் வரவில்லை. கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் படிக்கும்போது இயக்குநராக வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால், இந்த மாதிரியான படங்களைத்தான் எடுக்க வேண்டும் என்ற விருப்பத்துடனேயே இங்கு வந்தேன். ஆரம்பத்தில், மூன்று வருடங்களுக்கு மேல் இந்த துறையில் இருப்பேன் என்று நம்பிக்கை இல்லை. ஏனெனில், நாம் பேசும் அரசியல் நமது ஊரில், நமது காலனியைத் தாண்டி பேசினாலே ஏற்றுக்கொள்ளப்படாது. இவ்வளவு பெரிய இடத்தில் நாம் பேசுவது எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்? இது ஒரு முரண்பாடான இடமாக இருக்கும். இதில் எப்படி தாக்குப்பிடிப்பது என்று யோசித்திருந்தேன்.

இந்தச் சவால்களை எப்படிக் கையாள்வது, எப்படிப் பேசுவது, எப்படி மொழியாக மாற்றுவது, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு மீடியமாக எப்படி இதைக் கையாள்வது என்று தொடர்ந்து யோசித்து வருகிறேன். குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஓர் இயக்குநராக எனக்குப் பிடித்த படங்களை எடுத்துவிட்டு செல்லவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், மக்கள் என்னை இயக்குநராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் ஏற்றுக்கொண்டார்கள். அதன் மூலம், நீலம் தயாரிப்பு நிறுவனம் இவ்வளவு பெரிய நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இதன் மூலம் பல இயக்குநர்கள், பலர் வெளியே வந்திருக்கிறார்கள். இது உண்மையிலேயே பெரிய மகிழ்ச்சியாகவும், உத்வேகமாகவும் இருக்கிறது என்றார்.

படம் ஒன்றை உருவாக்கி, அதை முடித்து வெளியிடுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இன்றைய சூழலில், வழக்கமான வணிகத் திரைப்படமோ அல்லது கலைத்தன்மை கொண்ட திரைப்படமோ எடுப்பதற்கு பல சவால்கள் உள்ளன. ஆனால், நாங்கள் இந்த வழக்கமான வணிக மற்றும் கலைப்படங்களைத் தாண்டி, ஒரு அரசியல் கருத்தை முன்வைக்க முயல்கிறோம். ஒரு கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிக்கிறோம். இத்தகைய கருத்துகளை முன்வைக்கும் திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறுமா, மக்களிடம் சென்று சேருமா என்பது ஒரு முக்கியமான கேள்வியாக உள்ளது.

ஒரு படத்தை வெளியிடும்போது, இங்குள்ள பார்வையாளர்கள், ஓடிடி நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோரை எவ்வாறு கையாளுவது, இந்தச் சவால்களை எப்படி மீறி இதுபோன்ற படங்களை வெளியிடுவது என்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது.

ஓடிடி நிறுவனங்களின் ஆதரவு குறைந்த இந்தக் காலகட்டத்தில், மீண்டும் திரையரங்கங்களையும், மக்களையும் நோக்கிச் செல்கிறோம். மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த கதைகளைச் சொல்லாமல் அவர்களின் சமூகப் பிரச்சனைகளைப் பேசும் கதைகளைச் சொல்லும்போது, ஒரு பெரிய சவால் எழுகிறது.

உலக அளவிலும் இந்திய அளவிலும் இடதுசாரி இயக்கங்கள் வலுவாக இருந்த காலத்தில் இருந்ததை விட, இன்று வலதுசாரி இயக்கங்கள் மிகவும் வலுவாக, தீவிரமாக உருவாகியுள்ளன.

முன்பு, ஒரு திரைப்படத்தில் உள்ள குறியீடுகளைப் புரிந்து கொள்ள அறிவுஜீவிகள் மட்டுமே ஆராய்ந்து பேசுவார்கள். இந்தக் குறியீடை முன்வைத்து இயக்குநர் என்ன சொல்ல முயல்கிறார் என்று விளக்குவார்கள். ஆனால், இன்று அந்தக் குறியீடுகளைப் புரிந்து கொள்வதற்கும் ஆய்வு செய்வதற்கும் பலர் முன்வந்துள்ளார்கள்.

படம் வெளியிடுவதற்கு உள்ள சவாலை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தப் பணியை ஆர்வத்துடன் செய்கிறோம். மக்களிடம் ஒரு கருத்தைக் கொண்டு சேர்க்க முயல்கிறோம். எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை மக்கள்தான். மக்களைத் தவிர வேறு யாரையும் நாங்கள் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. இறுதியாக, மக்களிடமே திரும்பத் திரும்ப செல்கிறோம்.

மக்களை திரையரங்கத்திற்கு அழைத்து வருவது, அவர்களைப் படத்தைப் பார்க்க வைப்பது, படம் அவர்களுக்கு பிடித்திருந்தாலும் அவர்கள் திரையரங்கத்திற்கு வந்து பார்ப்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது. ஆனால், இந்த சவாலை ஏற்றுக்கொண்டுதான் நாங்கள் இப்போது படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். மக்களைத் தவிர வேறு எந்த நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. நீங்கள் எங்களை உறுதியாக ஆதரிப்பீர்கள் என்று நாங்கள் மிகவும் நம்புகிறோம்.

இந்த நம்பிக்கையால்தான், யாராலும் எண்ண முடியாத, இத்தகைய பிரச்னைகளைப் பேசினால் பல பின்விளைவுகள் வரும் என்று தெரிந்தும், நாங்கள் தண்டகாரண்யம் என்கிற படத்தை உருவாக்கியுள்ளோம். இந்தப் படத்தின் மூலம் மேலும் பல படங்களை உருவாக்குவதற்கு ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இந்த நம்பிக்கை வீண்போகாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன் தான் நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறோம். எனது உதவி இயக்குநர்கள் உட்பட அனைவரும் இந்த நம்பிக்கையுடனேயே படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் அம்பேத்கரின் கொள்கைகளைப் பேசுவேன், வேறு ஒருவர் கம்யூனிசக் கொள்கைகளைப் பேசுவார். எங்களுக்குள் கருத்து முரண்பாடுகள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், நாங்கள் அனைவரும் ஒரு பொதுவான தளத்தில் இயங்குகிறோம். ஒரு காட்சியில், திடீரென ஒருவர் சிவப்பு நிற சட்டை அணிந்து வருவதை, இயக்குநர் அதியன் காண்பித்தார். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு நீல நிற சட்டை அணிந்த ஷாட் வரும் தோழர் என்றார். நீல நிற சட்டை வேண்டாம், சிவப்பு நிறத்தை வை, எனக்கு சிவப்பு நிறத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொன்னேன்.

சமத்துவத்தை விதைப்பதற்கு முயற்சிக்கிறோம். இந்த நோக்கத்துடன், வணிக ரீதியாக வெற்றி பெறக்கூடிய ஒரு சூழலை உருவாக்க முயற்சிக்கிறோம். மக்களை கலை அம்சத்துடனும் கலை கொண்டாட்டத்துடனும், நாங்கள் நம்பும் அரசியல் கருத்துகளைக் கொண்டு சேர்க்க முயல்கிறோம்.

நாங்கள் வெறுமனே ஒரு பொருளை விற்க முயலவில்லை. எங்களுக்கு ஒரு பெரிய நோக்கம் உள்ளது. இந்தச் சமூக ஏற்றத்தாழ்வை உடைத்து, சமத்துவத்தை விதைப்பதற்கு முயல்கிறோம். மக்கள் இந்த நோக்கத்தை சரியாகப் புரிந்து கொண்டதால்தான் நாங்கள் இங்கு இருக்கிறோம்.

அம்பேத்கர் தான் எனக்கு ஒரு நேரடி முன் உதாரணம். அவரை நான் எப்போதும் நினைப்பேன். அவருடைய எண்ணங்களும், செயல்களும் இந்தியச் சமூகத்தில் வேறு யாராலும் கடக்க முடியாதவை. அவருடைய எழுத்துகளும் கொள்கைகளும் என்னை வழிநடத்துகின்றன. நான் மக்களை மட்டுமே நம்புகிறேன், வேறு யாரையும் நம்பவில்லை.

நேபாளத்தில் ஒரு ராப் இசைக் கலைஞர் தான் ஒரு பெரிய போராட்டத்திற்கு தூண்டுதலாக இருந்தார். கலை என்பது சாதாரணமான விஷயமல்ல. கலை என்பது வெறும் அழகியல் உணர்வு மட்டுமே என்று சிலர் சொல்வார்கள். அரசியல் ரீதியாகக் கொண்டு சென்றால் பிரச்னை வரும் என்பார்கள். ஆனால், கலை பல நாடுகளில் பெரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளது. நேபாளத்தில் கூட அந்த மாற்றத்தை உருவாக்க முயல்கிறது. ஒரு கலைப்படைப்பு எப்படி ஒரு போராட்டத்துக்கு வழிவகுக்கும்?

நீலம் தயாரிப்பு நிறுவனம் இத்தகைய பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கக் காலத்தில், திரைப்படங்கள் அரசியல் மாற்றத்திற்கு தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டன. சமூக நீதி என்ற கொள்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு நிறுவனமாக நீலம் இருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

நீலம் தயாரிப்பு நிறுவனத்தை என்னுடன் இணைந்து பல நண்பர்கள் ஆதரித்து இயக்கி வருகிறார்கள். குறிப்பாக, நந்தகுமார் அண்ணன் எனக்கு எப்போதும் ஒரு பெரிய நம்பிக்கையாகவும், உதவியாகவும் இருக்கிறார். இதுபோல பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

தண்டகாரண்யம் ஒரு சொல்ல முடியாத கதை. அதை உருவாக்கிய அதியன் ஆதிரைக்கு எனது வாழ்த்துகளும், நன்றிகளும். அவர் உறுதியான கொள்கைகளைக் கொண்டவர். அம்பேத்கரியம், கம்யூனிசம் பற்றி இருவரும் பல விவாதங்கள் நடத்தியுள்ளோம். ஆனால், அவர் ஒருபோதும் தனது கொள்கைகளில் இருந்து பின்வாங்கியதில்லை. அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன்.

பலருக்கு நான் எப்படித் தொடர்ந்து படங்களை உருவாக்குகிறேன், தயாரிக்கிறேன், நீலம் பண்பாட்டு மையத்தை இயக்குகிறேன் என்ற கேள்வி இருக்கலாம். இவை எல்லாம் நான் செய்யவில்லை; எனது குழுவினரே செய்கிறார்கள். நான் வெறுமனே இவை நடக்கின்றனவா என்று கவனிக்கும் ஒருவனாக இருக்கிறேன்.

இன்னும் பல படங்கள் வரவிருக்கின்றன. வெக்கை, பைசன், மக்கள் காவலன் ஆகிய படங்கள் உள்ளன. இவை தவிர, மூன்று படங்கள் தயாரிப்பில் உள்ளன. இவை எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பி உருவாக்கப்படவில்லை; மக்களை நம்பியே படம் எடுக்கிறோம்.

இந்தப் படங்கள் திரையரங்கங்களை நோக்கி வருகின்றன. உங்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே நாங்கள் இதைத் தொடர முடியும் என்றார்.