சுரேஷ் காமாட்சி 
சினிமா

பட நிகழ்ச்சிக்கு ரூ. 3 லட்சம் கேட்ட அபர்ணதி: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

இதுபோன்ற நடிகை தமிழ் சினிமாவுக்கு தேவையில்லை.

யோகேஷ் குமார்

படத்தின் விழாவுக்கு ரூ. 3 லட்சம் கொடுத்தால் தான் வருவேன் என்று நடிகை அபர்ணதி கூறியதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியுள்ளார்.

புதுமுக இயக்குநரான ஸ்ரீ வெற்றி இயக்கத்தில், அபர்ணதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘நாற்கரப்போர்’.

இப்படத்தில் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இதில் பேசிய அவர், “அபர்ணதி போன்ற நடிகை தமிழ் சினிமாவுக்கு தேவையில்லை” என்றார்.

சுரேஷ் காமாட்சி பேசியதாவது

“அபர்ணதி இப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், இந்த விழாவுக்கு அவர் வராதது வருத்தமாக உள்ளது. அபர்ணதியை புரமோஷனுக்கு அழைத்தால் ரூ. 3 லட்சம் கொடுத்தால் தான் வருவேன், இல்லையெனில் வரமாட்டேன் என்று பதிலளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நான் அவருக்கு போன் செய்து, புரமோஷனுக்கு நீங்கள் வராமல் இருப்பது நியாயமில்லை என்றேன். அதன் பிறகும் அவர் ரூ. 3 லட்சம் கொடுத்தால் தான் வருவேன் என்றார். மேலும் தன்னுடன் மேடையில் யார் அமர வேண்டும் என்பதையும் அவரே சொன்னதால் எனக்கு கோபம் வந்தது.

இது தொடர்பாக நடிகர் சங்கத்தில் புகார் அளிக்க சொன்னதற்கு, நான் நடிகர் சங்க உறுப்பினரே கிடையாது என்றார். சில நாள்களுக்குப் பிறகு அவரே போன் செய்து, நான் வரேன் என்றார். ஆனால், விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. வெளியூரில் இருப்பதாகக் கூறியிருக்கிறார். இதுபோன்ற நடிகை தமிழ் சினிமாவுக்கு தேவையில்லை. தயாரிப்பாளருக்கு கஷ்டத்தை கொடுப்பதற்கு பதிலாக அவர் வெளியூரில் இருப்பதே மேல்” என்றார்.