கார்த்தி 
சினிமா

தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவு வருத்தமளிக்கிறது: கார்த்தி

"யாருடனும் கலந்தாலோசிக்காமல் இப்படி ஒரு முடிவை எடுப்பது தவறு".

யோகேஷ் குமார்

தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக ஒரு முடிவை எடுத்துள்ளதாக நடிகர் கார்த்தி பேசியுள்ளார்.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.

இதில், தனுஷை வைத்து இனி படம் தயாரிக்கவுள்ள தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, “தயாரிப்பாளர் சங்கம் குறிப்பிட்டபடி, இதுவரை எந்த புகாரும் வரவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

கார்த்தி பேசியதாவது

“தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் இணைந்து நல்ல நட்புடன் பணியாற்றி வருகிறோம். இதுவரை எந்த பிரச்னையாக இருந்தாலும் இரண்டு சங்கங்களும் இணைந்து கலந்தாலோசித்தப் பிறகே அனைத்து முடிவுகளையும் எடுத்து வந்தோம். ஆனால், தற்போது தயாரிப்பாளர் சங்கம் தன்னிச்சையாக ஒரு முடிவை எடுத்துள்ளது. அவர்களின் முடிவு வருத்தமளிக்கிறது.

தயாரிப்பாளர் சங்கம் குறிப்பிட்டபடி, இதுவரை எந்த புகாரும் வரவில்லை. படப்பிடிப்புகள் நடைபெறாது என்ற முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள். யாருடனும் கலந்தாலோசிக்காமல் இப்படி ஒரு முடிவை எடுப்பது தவறு” என்றார்.